ஓ.பி.எஸ். மகன் மீது பெண் அளித்த புகாரை விரைந்து விசாரிக்க வேண்டும்

நாகர்கோவில், ஆக.3 : ஓ.பி.எஸ். மகன் மீது பெண் அளித்துள்ள புகாரை விரைந்து விசாரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். நாகர்கோவிலில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில், கூடுதலாக ரேஷன் கடைகளில் தக்காளியை விற்கலாம். நடமாடும் கடைகள் மூலம் தெருக்களில் விற்பனை செய்யலாம். அப்போது தான் மக்களுக்கு தக்காளி எளிதாக கிடைக்கும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியல் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அது சும்மா சொல்கிறார்கள். எங்களுக்கு மடியில் கணமில்லை. கொடநாடு கொலை வழக்கை தமிழ்நாடு அரசு விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார். ஆனால் அவரது மகன் மீது ஒரு பெண் போக்சோ புகார் அளித்துள்ளார். அது தொடர்பாக இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பார்க்க வேண்டும். விரைந்து இந்த புகாரை விசாரிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்துள்ளார்கள். ஓ.பி.எஸ்.சும், டி.டி.வி. தினகரனும் உதிர்ந்து போன முடிக்கு சமம் தான். எவ்வளவோ பேர் கட்சியை விட்டு சென்றுள்ளனர். கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு போனவர்கள் பேசதான் செய்வார்கள். பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை இயக்கத்தை வளர்க்க கொள்கை ரீதியாக பாத யாத்திரை செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஓ.பி.எஸ். மகன் மீது பெண் அளித்த புகாரை விரைந்து விசாரிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: