ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கும் வசதி தபால்காரர்கள் மூலம் சிறப்பு ஏற்பாடு

மதுரை, ஆக. 3: ஓய்வூதியர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே தபால்காரர்கள் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதியை தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது. அரசு ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு தபால்துறை சேவை மூலம் உயிர்வாழ் டிஜிட்டல் சான்று வீடு தேடி வந்து வழங்கப்படுகிறது.மதுரை தபால் கோட்டத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, 300க்கும் மேற்பட்ட தபால் அலுவலகங்கள் மூலமும் ஸ்மார்ட் போன்கள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் உள்ள 450க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் ஊழியர்கள் மூலமும் வங்கி மற்றும் பிற சேவை வசதிகளை வழங்கி வருகிறது.

இதில் ஓய்வூதியர்கள் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஓய்வூதியர்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்கலாம். இச்சேவைக்கு கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் உடனடியாக டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். எனவே அரசு ஓய்வூதியர்/ குடும்ப ஓய்வூதியர்கள் இந்த சேவை வசதியை பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இத்தகவலை மதுரை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாணவரதராஜன் தெரிவித்துள்ளார்.

The post ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கும் வசதி தபால்காரர்கள் மூலம் சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: