ஓட்டலில் வாங்கிய சாம்பார் இட்லி பார்சலில் புழு * சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் * உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, அக்.18: திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஓட்டலில் வாங்கிய சாம்பார் இட்லி பார்சலில் புழு இருந்ததாக சமூக வலைதளத்தில் பரவிய வீடியோவை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், நேற்று முன்தினம் திருவண்ணாமலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் சாம்பார் இட்லி பார்சல் வாங்கியுள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அதில் புழு மிதந்திருந்தாக கூறப்படுகிறது. எனவே, மீண்டும் அந்த உணவு பார்சலை எடுத்து கொண்டு வந்து, ஓட்டல் ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால், பார்சல் வழங்கியபோது அதில் புழு இல்லை என ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடிேயா சமூக வலைதளத்தில் பரவியது.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் எழில் உள்ளிட்டோர் நேற்று சம்பந்தப்பட்ட ஓட்டலில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, சமையல் கூடம், சமைத்த உணவு பொருட்களை பாதுகாக்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும், வீடியோவில் இருந்த காட்சியில் தெரிந்த புழு, கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றில் உள்ளதுபோல தெரிந்ததால், ஓட்டலில் இருந்த காய்கறிகளையும் நறுக்கி பார்த்தனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், ‘சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ பதிவு அடிப்படையில் சோதனை நடத்தினோம். எவ்வித விதிமீறலும் கண்டறியப்படவில்லை’ என்றனர்.
ஓட்டலில் வாங்கிய சாம்பார் இட்லி பார்சலில் புழு இருந்ததாக வீடியோ வைரலான சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஓட்டலில் வாங்கிய சாம்பார் இட்லி பார்சலில் புழு * சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் * உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு திருவண்ணாமலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: