திருவாரூர், ஆக. 15: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஓடாச்சேரி ஊராட்சியில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 3 ஆயிரத்து 877 சதுர அடி பரப்பளவில் மணமகன் மற்றும் மணமகள் அறை, மணமேடையுடன் கூடிய மணவிழாக்கூடம், உணவு உண்ணும் கூடம், ஒப்பனை அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய அரசு சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது.
ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் மாநில அரசு நிதி ஒப்பளிப்புடன் தாட்கோ மூலம் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. சமுதாய கூடத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சியானது கலெக்டர் சாரு தலைமையிலும், நாகை எம்.பி செல்வராஜ், எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன், ஒன்றியகுழு தலைவர் புலிவலம்தேவா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 19 ஆயிரத்து 270 மதிப்பீட்டில் – பயணிகள் ஆட்டோ வாகனம், சென்ட்ரிங், சுமை வாகனம், சுற்றுலா வாகனம் என தொழில் தொடங்குவதற்கு எதுவாக மானியத்தொகையுடன் கூடிய வங்கிகடனுக்கான காசோலையையும் கலெக்டர் சாரு வழங்கினார்.
இதில் ஆர்.டி.ஓ சௌம்யா, தாட்கோ செயற்பொறியாளர் வெங்கடேசன் (தஞ்சை கோட்டம்), தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் அமுதா, ஒன்றிய துணை பெருந்தலைவர் துரைதியாகராஜன், தாசில்தார் செந்தில், திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ், கண்ணகி, ஓடாச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் நெல்சன்மண்டேலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post ஓடாச்சேரியில் ₹86 லட்சத்தில் சமுதாய கூடம் appeared first on Dinakaran.