ஓசூர், அக்.26: ஓசூரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற 10 கடைகளுக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர். ஓசூர் மாநகராட்சி பகுதிகளில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் உத்தரவின்பேரில், டிஎஸ்பி பாபுபிரசாந்த் மேற்பார்வையில் கடந்த 2 நாட்களாக கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 63 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 12 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 42 பேரின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மீதமுள்ள கடைகளுக்கும் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, போலீசாரின் நடவடிக்கைகள் தொடரும் என டிஎஸ்பி பாபுபிரசாந்த் தெரிவித்துள்ளார்.
The post ஓசூரில் குட்கா விற்ற 10 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.