ஒன்றிய அரசு பலவீனமாக இருப்பதால் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

 

ராமேஸ்வரம், அக். 18: ஒன்றிய அரசு பலவீனமாக இருப்பதால்தான் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலும், சிறைபிடிப்பு நடவடிக்கைகள் தொடர்கிறது என அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022 வரையிலான காலங்களில் தமிழக மீனவர்களின் 200 படகுகள் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில், 140 படகுகள் இலங்கை நீதிமன்ற உத்தரவுப்படி அரசுடமையாக்கப்பட்டது.

இந்த படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விட்டு விட்டதால் படகுகள் உடைக்கப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தமிழக மீனவர்களுக்கு சுமார் ரூ.200 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் வாழ்வாதாரமும் பறிபோயுள்ளது. இந்த ஆண்டு துவங்கி சமீபத்தில் பிடிபட்ட படகுகள் சேர்த்து 22 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 137 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு முறை துப்பாக்கிச்சூடு சம்பவமும், பலமுறை மீவர்கள் மீதான தாக்குதலும் நடந்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சி பலவீனமாக இருப்பதால்தான் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், சிறைப்பிடிப்பு சம்பவங்களும் தொடர்கின்றன. தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 27 பேரையும், படகுகளையும் விடுவிப்பதற்கு ஒன்றிய அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய அரசு பலவீனமாக இருப்பதால் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: