வேலூரில் பிரபல ரவுடிகள் இல்லாத நிலையில் ரவுடி சாம்ராஜ்யம் நடத்த கொலையாளிகள் திட்டமா?: போலீசார் திடுக் தகவல்

வேலூர்: வேலூர் அடுத்த அரியூர் முருக்கேரியை சேர்ந்தவர்களான புழல் சிறை வார்டன் தணிகைவேலு(25) மற்றும் திவாகர்(26), காமேஷ்(25) ஆகியோர் 8ம் தேதி இரவு புலிமேடு, ஊசூர் ராஜாபாளையம் பகுதிகளில் ரவுடி எம்எல்ஏ ராஜா  தாலைமையிலான 7 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். அவர்களை பாகாயம் போலீசார் வாகன சோதனையின்போது பிடித்தனர். இதையடுத்து, எம்எல்ஏ ராஜா, அவரது கூட்டளிகளான உமாமகேஸ்வரன், லோகேஷ், ஆனந்த், ரோகித்குமார், சுனில், சேம்பர் ராஜா ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 கைது செய்யப்பட்ட 7  பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறியதாவது: வேலூரில் முக்கிய ரவுடிகளாக வசூர் ராஜா, ஜானி, குப்பன் ஆகியோர் இருந்து வருகின்றனர். அவர்களில் குப்பன், ஜானி ஆகியோர் சிறையில் உள்ளனர். ஏற்கனவே வசூர் ராஜா வழுக்கி விழுந்து கால்கள் உடைந்த நிலையில் ஜாமீனில்  வெளியில் வந்தார். தொடர்ந்து ரவுடியிசத்தில் இருந்து விலகிய வசூர் ராஜா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வெளியூரில் குடும்பம் நடத்தி வருகிறார்.

அதேபோல் ஜானியும், வழுக்கிவிழுந்து கால்கள் உடைந்த நிலையில் சிறையில் உள்ளார். இவ்வாறு 3 பேரும் வேலூரில் வலம் வர முடியாத சூழலில் ரவுடியிசம் இல்லாமல் சில மாதங்களாக வேலூர் பகுதி உள்ளது.

இந்த சூழலை நாம்  பயன்படுத்திக்கொண்டு பெரிய ரவுடியாக வலம் வரலாம் என எம்எல்ஏ ராஜா திட்டமிட்டு ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். வெளியே வந்ததும் தன்னிடம் ஏற்கனவே முன்விரோதம் கொண்டிருந்த காமேஷையும், அவரது கூட்டாளி  திவாகரையும் கொலை செய்ய திட்டமிட்டார். தனது திட்டத்துக்கு ஏற்கனவே தனது கூட்டாளியான சேம்பர் ராஜாவுடன் 20 வயதுக்கு உட்பட்ட உமாமகேஷ்வரன், லோகேஷ், ஆனந்த், ரோகித்குமார், சுனில் ஆகியோரை சேர்த்துக்கொண்டு கடந்த  செவ்வாய்க்கிழமை இரவு முதலில் தன்னுடன் தொடர்பில் இருந்த திவாகரை போன் மூலம் எம்எல்ஏ ராஜா அழைத்துள்ளார்.

எம்எல்ஏ ராஜா சமாதானம் பேச அழைத்தாலும், துணையாக இருக்கட்டும் என்று தனது உறவினரான சிறை வார்டன் தணிகைவேலுவை போன் மூலம் அழைத்தார். அவர் தனது தாயார் தடுத்த போதும், திவாகர் அழைப்பதாகவும், என்னவென்று  கேட்டுவிட்டு உடனே வந்துவிடுவதாகவும் சொல்லி சென்றுள்ளார். இதனால் முதலில் இவர்கள் 2 பேரையும் புலிமேடு அழைத்து சென்று அவர்கள் மூலம் காமேஷூக்கு அழைப்பு விடுத்த பின்னர் கொலை செய்துள்ளார். அதை தொடர்ந்து  காமேஷையும் கொன்று பின்னர் போலீசில் சிக்கியுள்ளனர்.

போலீசில் சிக்கியும் அவர்கள் எந்தவித பதற்றமும் இன்றி சாதாரணமாகவே இருந்துள்ளனர். அதோடு தங்கள் திட்டப்படி 3 பேரையும் ஒரு சேர போட்டுத்தள்ளியதும், அதிலும் சிறைத்துறை போலீசை போட்டுத்தள்ளியதன் மூலம் பெரிய  தாதாவாக நிச்சயம் வலம் வர முடியும் என்றும், கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் மூலம் நிறைய சம்பாதிக்கலாம் என்றும் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே எம்எல்ஏ ராஜா, சேம்பர் ராஜா ஆகியோர் மீது செம்மரக்கடத்தல், கொலை, கொள்ளை உட்பட  பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

4 ரவுடிகள் திருச்சிக்கு மாற்றம்

வேலூர் அருகே நடந்த 3 பேர் கொலை தொடர்பாக கைதான ரவுடி எம்எல்ஏ ராஜா மற்றும் அவரது கூட்டளிகளான உமா மகேஸ்வரன், லோகேஷ், ஆனந்த், ரோகித்குமார், சுனில், சேம்பர் ராஜா ஆகிய 7 பேரை கைது செய்து வேலூர் மத்திய  சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 7 பேரில் ரவுடிகள் எம்எல்ஏ ராஜா, சேம்பர் ராஜா, சுனில், அப்பு என்கிற உமாமகேஷ்வரன் ஆகிய 4 பேரும் நிர்வாக காரணங்களுக்காக திருச்சி சிறைக்கு  மாற்றப்பட்டனர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: