ஊட்டியில் மேக மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 

ஊட்டி, நவ. 7: ஊட்டி மற்றும் சுற்று புற பகுதிகளில் நேற்று பகல் நேரங்களில் சில இடங்களில் கடும் மேக மூட்டம் இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

அதேசமயம், பகல் நேரங்களில் மேக மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்று புற பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மேக மூட்டம் அதிகமாக காணப்படுவதால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றன. நேற்றும் பகல் நேரங்களிலேயே சில பகுதிகளில் மேக மூட்டம் காணப்பட்டது.

ஊட்டி அருகேயுள்ள காந்திப்பேட்டை, நுந்தளா மட்டம், 6வது மைல் போன்ற பகுதிகளில் மேக மூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல், வேலிவியூ, தொட்டபெட்டா, கோத்தகிரி சாலைகளில் மேக மூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், பகல் நேரங்களிலேயே வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி சென்றன. நீர் நிலைகள், வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர்.

The post ஊட்டியில் மேக மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: