உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

காஞ்சிபுரம், நவ.15: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் வழங்குகின்ற மனுக்கள் மீது உடடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒரு நாள் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை வாரியாக பிரித்து அம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க நேற்று மனுக்கள் பெறப்பட்டன.

இதற்கென்று, தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்க கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், நிதி ஆதாரத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில், பெறப்பட்ட 182 மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு சரி செய்ய வேண்டும். மின் கம்பங்களை மாற்றப்பட வேண்டும். சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது அதனை சரி செய்யப்பட வேண்டும்.

நமக்கு தெரியாத சில பிரச்னைகள் மற்றும் மக்களின் தேவைகளை மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது. அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பின்னர், அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக் கொண்டார்.
இதில், நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேற்று பெற்றார். பின்னர், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சிகளில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: