நன்றி குங்குமம் தோழி நடிகை சரண்யா ரவிச்சந்திரன்தொலைக்காட்சி தொகுப்பாளினி, குறும்பட நாயகி, நாடக நடிகை, வெள்ளித்திரை நடிகை என பன்முக தன்மை கொண்டவர் சரண்யா ரவிச்சந்திரன். இவர் தனது கலையுலக பயணத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார். “சொந்த ஊர் திருச்சி. படித்து வளர்ந்ததெல்லாம் அங்குதான். சென்னை பிடிக்கும் என்பதாலும், ஊரில் இருந்தால் ஏதும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து வேலைக்காக இங்கு வந்தேன். எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு ேசர்ந்தேன். அங்கு வேலைப்பார்ப்பவர்கள் பெரும்பாலும் நல்ல நிறத்தில் இருப்பாங்க. நான் கொஞ்சம் கருப்பு நிறம். அதனால் எனக்குள் நிறம் சார்ந்த தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டது. ஆனால் என்னுள் ஏற்பட்ட தாழ்வு உணர்வினை நான் யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. மாறாக அதை மறைப்பதற்கு என்னை நானே மாற்றிக் கொண்டேன். விதவிதமாக வண்ண நிறங்களில் துணிகள் அணிய ஆரம்பிச்சேன். அதே போல் நானும் பளிச்சென்று தெரிய வேண்டும் என்று, மேக்கப் அதிகமாகப் போட்டுக்கொண்டேன்’’ என்றவர் வீட்டுக்கு செல்லப்பிள்ளையாம்.‘‘எங்க வீட்டில் நான் ஒரே பொண்ணு. சின்ன வயதில் இருந்து எனக்கு வாய் கொஞ்சம் அதிகம். எப்போதும் பேசிக் கொண்டே இருப்பேன். என்னுடைய பேச்சினை பார்த்த என் நண்பர்கள் என்னை தொலைக்காட்சியில் வி.ஜேவாக முயற்சி செய்யச் சொன்னார்கள். அவர்கள் தந்த ஆர்வத்தில் எனக்குள் வி.ஜேவாக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. என்ன தைரியம் என்று தெரியவில்லை. பார்த்துக் கொண்டு இருந்த நல்ல வேலையை விட்டுவிட்டேன். சென்னையில் உள்ள அனைத்து சேனல்களிலும் ஏறி இறங்கினேன். எல்லாரும் ஒரே டயலாக்கை தான் திரும்ப திரும்ப சொன்னாங்க. ‘நல்லா பேசுறீங்க, எல்லாம் சிறப்பா இருக்கு. என்ன உங்களின் நிறம்தான்’ என்று சொன்னார்கள். அந்த சமயத்தில், ‘தீரன்’ தொலைக்காட்சி மட்டும் விதிவிலக்காக, என் திறமையைப் பார்த்து வேலைக்குச் சேர்த்துக்கொண்டார்கள். அந்த சேனல் மட்டும் இல்லை என்றால் திரைத் துறையில் இன்று நான் இருந்திருக்க முடியாது’’ என்றவர் குறும்படத்திலும் நடிக்க துவங்கியுள்ளார்.;‘‘தீரன் டிவியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, அங்கு பணிபுரிந்த எடிட்டர் பாலாஜி, துர்க்கை ராஜ் ஆகியோர் மூலமாகக் குறும்படத்திற்கான அறிமுகம் கிடைச்சது. அந்தப் படத்தில் நடித்ததைப் பார்த்து, ‘உனக்கு நடிப்பும் வருகிறது. அதில் முயற்சி செய்’ என்றதும், நடிப்பு மீது ஈர்ப்பு வந்தது. தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துவிட்டேன். அதில் பாதி கல்லூரி புராஜக்ட்டுக்காக நடித்தது. இந்த அனுபவம் எனக்கு கேமரா முன் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தது. இதில் கொடுமை என்னவென்றால், ஒரு சிலரின் குறும்படங்களுக்கு வெள்ளை பொண்ணுங்கதான் தேவையாக இருக்கும். அவர்கள் இல்லாதபோது என்னை அழைப்பார்கள். அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை பணம் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், எனக்கென்று வரும்போது அது ஆயிரம், ஐந்நூறு என்று குறைந்துவிடும். அதிலும் பேரம் பேசுவார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஒரு சிலர் என் நிறத்தை வைத்து அதிக தாழ்வுமனப்பான்மை ஏற்படுத்தினார்கள். அதை எண்ணி வருத்தப்படாமல், எனக்கான உந்துதலாக தான் நான் அதனை எடுத்துக் கொண்டேன். அந்த முயற்சிக்குக் கிடைத்த பரிசு, நான் நடித்த பல குறும்படங்கள் விருதுகள் பெற்றது தான்’’ என்றவர் அடுத்த கட்டமாக திரைப்படங்களிலும் முகம் பதிக்க ஆரம்பித்துள்ளார்.‘‘நலன் குமாரசாமி சார் இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம்தான் எனது முதல் வெள்ளித்திரை அனுபவம். திரைத்துறைக்கு வந்த இந்த நான்கு வருடங்களில் நூறு கம்பெனிகளுக்கு மேல் ஏறி இறங்கியிருப்பேன். எங்கு போனாலும் என் நிறம் தான் எனக்கான வாய்ப்புக்கு தடையாக இருந்தது. நல்ல நிறமுள்ள பெண்கள் தான் தேர்வானார்கள். அதைப் பார்க்கும் போது, ஏன் கதாநாயகியின் தோழிகள்கூட வெள்ளையாகத்தான் இருக்க வேண்டுமா என்று தோன்றும். தமிழ் மக்களுக்காக எடுக்கப்படும் திரைப்படத்தில் தமிழர்களின் நிறம் இல்லாமல் இருப்பதை நினைத்துப் பல முறை வருத்தப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து எனது மனதை தைரியப்படுத்துக் கொண்டு விடாமுயற்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ரெக்க, கோலி சோடா 2, மேயாத மான், செம, வடசென்னை, சங்கத் தலைவன், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு… என்று பல படங்கள் வெளியாகிவிட்டன.; வெள்ளை யானை, பைரி, ஜெயில், மண்டேலா போன்ற படங்களில் மட்டும் இல்லாமல், முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன். சினிமாவிற்கு அடுத்து வெப் சீரிஸ் தான் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நான் நடிச்ச ‘ஆட்டோ சங்கர்’ வெப்சீரிஸ் எனக்கான ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது பல வெப்சீரிஸ்களில் கமிட்டாகி இருக்கிறேன். மேலும் இரண்டு படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளேன். தமிழ் தவிர மலையாள மொழியிலும் அறிமுகமாகவுள்ளேன். சில படங்களில் தேர்வு செய்து இருப்பாங்க. ஆனால் பட ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது எனக்கான அழைப்பு இருக்காது, அது போல் பல முறை நான் ஏமாற்றம் அடைந்து அதனால் மனமுடைந்து போயிருக்கிறேன். சில திரைப்படங்களில் நடித்த பிறகுதான் உணர்ந்தேன், படப்பிடிப்புத் தளத்தில் போய் நடிக்கும் வரை என்ன வேண்டுமானாலும் மாறலாம், எடிட்டிங்கிலும் சில மாற்றங்கள் நிகழலாம் என்பதை’’ என்றவருக்கு மனம் வருத்தப்படும் போது எல்லாம் அவரின் குடும்பம் தான் ஆதரவாக இருந்துள்ளது. ‘‘நான் சினிமாவில் நடிக்க போகிறேன்னு வீட்டில் சொன்ன போது, அம்மா ரொம்பவே பயந்தாங்க. அவங்களுக்கு எல்லா அம்மாக்களைப் போல, சினிமாவில் கட்டிப் பிடித்து நடித்தால், முத்தம் கொடுத்தால் திருமணம் ஆகாது என்ற பயம். அப்பாவுக்கு என்னோட சந்தோஷம் தான் முக்கியம். யார் என்ன சொன்னாலும் அவர் அதை பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னோட தம்பிங்க ரெண்டு பேரும் நான் எப்போதெல்லாம் மனமுடைந்து போகிறேனோ அப்போதெல்லாம் ஆறுதலாக இருந்து, விளையாட்டு காண்பித்து என்னை ஊக்கப்படுத்துவானுங்க. அப்பாவோட பெரிய கனவு என்னை நடிகையாகப் பார்க்க வேண்டும் என்பதை சமீபத்தில்தான் உணர்ந்தேன். அந்த ஆசைகூட என்னால்தான் அவருக்கு வந்திருக்கிறது. என்னால் அவருக்கும் ஒரு காய்ச்சல் வந்துருச்சு. கறுப்பு நிறக் காய்ச்சல். எப்ப போன் செய்தாலும் ‘ஜூஸ் குடிச்சியா, வெயிலில் ஷூட்டிங் போனா வீட்டுக்கு வந்து என்னென்ன போடணுமோ அந்த க்ரீம்லாம் போட்டுக்கோ’ என்று சொல்வார். நான் பல முறை அவரிடம் கறுப்பாக இருந்தால் இங்கு ஜெயிக்க முடியாது என்று புலம்பியிருக்கிறேன். அந்த நேரம் ஆறுதலாக இருந்து என்னை தேற்றுவதில் முதல் நபர் என் அப்பா.நான் நடித்த குறும்படங்களைப் பார்க்கும்போது தான் எனக்கு தெரிந்தது. நான் கொஞ்சம் அதிகமாக தான் நடிக்கிறேன் என்று. இதற்கு என்ன செய்வது என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்கும்போது நடிப்புப் பயிற்சிக்கு போக சொல்லி அறிவுரை கூறினார்கள். அப்போதுதான், மறைந்த இயக்குநர் அருண்மொழி அவர்களோட ஸ்தானிஸ்லாவிஸ்கி நடிப்புப் பள்ளியில் சேர்ந்தேன். அங்கு கொஞ்ச காலம் நடிப்புப் பயிற்சி எடுத்து அவர்கள் அரங்கேற்றும் நவீன நாடகங்களில் பங்கேற்றேன். அதே போல் தியேட்டர் லேப் ஜெயராவ், என்.எஸ்.டி. ராஜேஷ், ஆடுகளம் நரேன், தேவி ரிக்ஷா இவர்கள் நடத்தும் நடிப்பிற்கான ஒர்க் ஷாப்களில் பங்கெடுத்து தற்போது ஓரளவு, நடிப்பு என்ற விஷயத்தில் கொஞ்சம் தெளிவு பெற்றிருக்கிறேன்.நடிப்பு வகுப்புகளுக்குச் செல்லும் போது, இயக்குநர் அருண்மொழி அவர்களின் வழிகாட்டுதலில், புத்தக வாசிப்பு இல்லாத எனக்குப் பல புத்தகங்கள் அறிமுகமாகின. சுஜாதாவின் சிறுகதைகள் மேல் அவ்வளவு பைத்தியம். அவரைத் தவிர ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்.ரா எழுத்துகளையும் படித்து வருகிறேன். சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’, கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ என்னை மிகவும் பாதித்த நாவல்கள்’’ என்றார். ‘‘ஊட்டியில் நடந்த சர்வதேச குறும்பட விழாவில், நான் நடித்த ‘காவல் தெய்வம்’ குறும்படத்திற்காக இயக்குநர் பாரதிராஜா சார் கையால் விருது பெற்றார். ‘வர்மா’ திரைப்படத்தில் இவரின் நடிப்பை பாராட்டி, இயக்குநர் பாலா இவருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். சிறந்த நடிகைக்கான ‘பாலு மகேந்திரா’ விருது பெற்ற இவரை, வசந்த பாலன் அவர்கள் ‘தமிழகத்தின் நந்திதா தாஸ்’ என்று சொன்ன தருணம் தன் வாழ்வில் மறக்க முடியாத தருணம். அதற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டு இருக்கும் இவருக்கு நடிப்பது மட்டுமின்றி, இயக்கத்திலும் ஆர்வமிருக்கிறது. ‘‘சினிமாவிற்கு வரும் வரை, என் வாழ்க்கையில் லட்சியம் என்று எதுவுமே கிடையாது. ஆனால், இங்கு வந்த பிறகு நான் சந்தித்த நபர்கள் அவர்களை பற்றிய கதை என்னை வேறொரு பரிணாமத்திற்கு நகர்த்தியது. ஒரு அலுவலகத்தில் தினந்தோறும் பார்க்கும் நூறு நபர்களை விட, இங்கு தினம் தினம் சந்திக்கும் வெவ்ேவறு மனிதர்கள் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர். பொறுமையும், சகிப்புத்தன்மையும் எனக்கானதாகியது. எனக்குள் ஆரம்பத்திலிருந்த குழப்பம், பயம், பதட்டம் நாளுக்கு நாள் சுக்குநூறாக உடைந்தது. ‘உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே’ போன்ற வரிகள் எனக்கானதாகியது. சின்ன இயக்குநரோ, பெரிய இயக்குநரோ என்றில்லாமல் சிறிய, பெரிய கதாபாத்திரங்கள் என்றெல்லாம் பார்க்காமல் ஒரு காட்சியில் வந்துவிட்டுச் சென்றாலும் அது பேசும்படியாக இருக்க வேண்டும். அந்த எண்ணத்தில் தான் நான் முழு நேரமும் பயணித்து வருகிறேன். இதனால் பொறுப்புகளும் அதிகமாகி உள்ளது. இந்த பொறுப்போடும், நம்பிக்கையோடும் 2020-யை துவங்கி இருக்கிறேன்’’ என்றார் சரண்யா.தொகுப்பு: அன்னம் அரசு
The post உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே! appeared first on Dinakaran.