சின்னமனூர், மே 29: சின்னமனூரில் உயரழுத்த மின் கம்பிகள் அருகில் இருந்த மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. தேனி மாவட்டம், சின்னமனூரில் பெரியாறு பெரிய வாய்க்கால் பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. பெரிய வாய்க்கால் சாலையோரத்தில் உயரழுத்த மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சின்னமனூர் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக பெரிய வாய்க்கால் பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள உயரழுத்த மின்கம்பிகளில் தென்னை மரங்களின் கிளைகள் உரசுகின்றன.
மேலும் மின்கம்பிகள் மீது தென்னை மரக்கிளைகள் ஒடிந்து விழுந்து அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மின்தடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்து, மின் கம்பிகள் அருகில் உள்ள தென்னை மரம் மற்றும் பிற மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவது சரி செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
The post உயரழுத்த மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றம் appeared first on Dinakaran.