நன்றி குங்குமம் டாக்டர் கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…நாம் குண்டாக இருக்கிறோம் என்ற எண்ணமே ஒருவரின் எல்லா செயல்களுக்கும் ஸ்பீட் பிரேக்கராக மாறுகிறது. உங்களின் அத்தனை சிந்தனையிலும் இயலாமை பரவச் செய்கிறது. நீங்கள் பயணிக்கும் பேருந்தில், உங்களது உறவினர்கள் மத்தியில், நண்பர்களின் சீண்டலில், உங்களுக்கான டிரஸ் தேடும்போது என பொதுவெளியில் ஒவ்வொரு நொடியும் யாராவது ‘நீ குண்டாக இருக்கிறாய்’ என்று ஏதோ ஒரு செயலால் உங்களை ஏளனம் செய்வது சாதாரணமாகிப் போகும்.உங்களது ஆழ்மனதில் மிகப்பெரிய ரணமாக இது மாறிப் போகும். ‘உடல் பருமனைக் கண்டு கொள்ளாமல்விட்டால் உங்களது தாம்பத்ய இன்பத்தையும் பாதிக்கும்’ என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா செந்தில்குமார்.ஆண்-பெண் இணைந்து பயணிக்க நீண்ட காலம் அவர்களைப் பிணைத்து வைப்பதே காமத்தின் வேலை. மனப் பொருத்தமே இல்லாத தம்பதியர் கூட வாழ்க்கை முழுவதும் இணைந்தே பயணிப்பதற்கு தாம்பத்ய இன்பமே காரணம். உடல் பருமன் இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ இருக்கும்போது செக்ஸ் தருணங்களில் வேகமாக இயங்க முடியாது.செக்ஸ் வைத்துக் கொள்வதைப் பற்றி யோசிக்கும்போது மனதுக்குள் ஒரு வெறுப்பும் பரவும். உடல் எடை காரணமாக முழுமையாக இயங்க முடியாமல், செக்ஸ் இன்பத்தில் உச்சம் தொடுவது கனவாகிப் போகும். தொப்பை பெரிதாவதால் அந்தரங்க உறுப்புகளை ஷேவ் செய்து சுத்தமாகப் பராமரிப்பதும் சிக்கலாக மாறும். இதனால் தாம்பத்யப் பொழுதில் தன் பார்ட்னருக்கு தன்னைப் பிடிக்காமல் போகுமா என்ற எண்ணமும் செக்ஸ் மீதான விருப்பத்தைக் குறைக்கும்.உடல் எடைக்கு ஏற்ப வழக்கமான நிலைகளில் உடலுறவு கொள்வது சவாலாக மாறும். இதற்கேற்ப உடலுறவின் நிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். உடலுறவுக்கு முன்பாக உணர்வுகளைத் தூண்டி விளையாடி உறவுக்குத் தயாராகும் மனநிலை இல்லாமல் போகலாம். இது போன்ற சவால்கள் இருவருக்கும் இடையில் மறைமுகமாக வெறுப்பை ஏற்படுத்தும்.தன்னால் மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லை என்ற எண்ணம், இதனால் அவள் தன்னை வெறுத்து விடுவாளோ என்ற பயம் ஆகியவை இணக்கமான சூழலை உடைக்கும். அதேபோல் கணவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையோ என்ற தயக்கம் இருக்கும். இதுபற்றி இருவரும் வெளிப்படையாகப் பேசிக் கொள்ளாத நிலையில் வேறு யாருடனாவது தொடர்பில் இருக்கலாமோ என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. இதுவே சின்னச்சின்ன சண்டைகளுக்கும் காரணமாகும். சந்தேகமும் இயலாமையும் கணவன் மனைவிக்கு இடையிலான சீனப்பெருஞ்சுவரைக் கட்டமைக்கும். கணவன்-மனைவி பிரிவுக்கு இதுவும் ஒரு காரணம்.உடல் எடையில் கவனம் செலுத்தாமல் விடுவதால் இருவரின் தோற்றப் பொலிவையும் குறைக்கிறது. சின்னச் சின்ன விஷயத்திலும் சலிப்பு ஏற்படும். இது வேறு பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும். ஹார்மோன் மாற்றங்கள், கை கால் வலி, சோர்வு என தொடர் பிரச்னைகளை உண்டாக்குகிறது. இதனால் பார்ட்னரில் ஒருவர் அடிக்கடி தாம்பத்ய உறவுக்கு ‘நோ’ சொல்லி மற்றவரின் வெறுப்புக்குக் காரணமாவார். இதுவே தொடரும்போது இருவருக்கும் மன அழுத்தத்தை உண்டாக்கும். கணவன் மனைவி உறவில் விரிசலை உண்டாக்கும்.உடல் பருமனால் சர்க்கரை மற்றும் இதய நோயாளியாக மாறவும் வாய்ப்புள்ளது. மற்ற டென்ஷனைக் கூட தாம்பத்ய உறவு குறைக்கும். கணவன் மனைவிக்கு இடையில் உள்ள சின்னச்சின்னச் கோபங்களைக் கூட தாம்பத்யத்தால் காணாமல் போகும். ஆனால், தாம்பத்யத்தில் பிரச்னை என்றால் இவை பல மடங்காய்ப் பெருகும். உடல் பருமனால் தாம்பத்யத்தின்போது தனது இணைக்கு முழுமையான இன்பத்தைத் தன்னால் தர முடியுமா என்ற சந்தேகம் ஏற்படுத்தும் தாழ்வு மனப்பான்மையால் கூட தாம்பத்யத்தில் விருப்பம் குறைய வாய்ப்புள்ளது.அதிகபட்ச உடல் பருமனால் சர்க்கரை நோய், இதயநோய், ஹைப்பர் டென்ஷன், தூக்கத்தில் பிரச்னை மற்றும் அதிக கொழுப்பு ஆகியவை எளிதில் தாக்கும். இது ஆண்-பெண் இருவர் மத்தியிலும் தாம்பத்ய உறவில் மந்தத் தன்மையை ஏற்படுத்துகிறது. ஆண்களுக்கு ஆணுறுப்பு விரைப்புத் தன்மையில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. இதயநோய், மிகை ரத்த அழுத்தம், குறைந்தளவு டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன், சர்க்கரை நோய், புகைபிடித்தல் ஆகியவை விரைப்புத் தன்மையில் பிரச்னையை உண்டாக்குகிறது. உடல் பருமனால் உடலில் ஏற்படும் தொடர் மாற்றங்களால் ரத்த நாளங்கள் பாதிப்படைகிறது. இதுவும் ஆணுக்கு தாம்பத்ய உறவில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.இவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்தும் உடல் பருமனை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். உடல் எடையைக் கூட்டும் உணவுகள், வாழ்க்கை முறை இரண்டையும் சரியாகப் பராமரிக்க வேண்டும். 35 வயதைத் தாண்டும் ஆண் பெண் இருவருக்கும் அலுவலக வேலைச் சுமைகள், குடும்பம் சார்ந்த கூடுதல் பொறுப்புகள், வயது சார்ந்த உடல் மாற்றங்களும் அவர்களின் உடல் பருமன் அதிகரிக்கக் காரணமாகிறது. பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் கருப்பை நீர்க்கட்டி, பிரீ மெனோபாஸ் போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது.உடல் எடை அதிகரிப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து உடல் எடைப்பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் ஆயிரம் காலடிகள் வைத்தாவது நடக்க வேண்டும். இதற்கான ‘ஆப்’ களை உங்களின் ஸ்மார்ட்போனில் வைத்து ஒரு நாளில் எத்தனை எட்டுக்கள் வைத்து நடக்கிறீர்கள் என்று கணக்கிடலாம். உங்களுக்கு மன உளைச்சல் தரும் விஷயங்களில் இருந்து விலகியிருக்கலாம். உடல் எடைக்குறைப்புக்கான உணவுத்திட்டம் மற்றும் உடற்பயிற்சி கட்டாயம் பலன் அளிக்கும். உணவு ஆலோசகர், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரிடம் முறைப்படி ஆலோசனை பெற்று சரியான ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்.நாம் ஸ்லிம்மாக இருக்கிறோம் என்ற எண்ணமே இளமையாய், சுறுசுறுப்பாய் உணரவைக்கும். உடல் நலக் குறைகள் எளிதில் உங்களைத் தொல்லை செய்யாது. ரொமான்ஸ் மூடுக்கும் குறைவிருக்காது. தாம்பத்ய நேரங்களில் உடலில் புது வேகம் பிறக்கும். உள்ளம் அன்பில் துள்ளிக் குதிக்கும். ஒவ்வொரு ஆண்டும் வயது குறைகிறதோ என்று எண்ணத் தோன்றும். இந்த வயசுல என்ன? என்று உங்கள் மனைவி வெட்கப்பட்டுக் கொண்டே, செல்லக்கோபம் கொள்வதைப் பார்த்து உங்கள் உள்ளம் பூரிக்கும்.( Keep in touch… )- கே.கீதா
The post உடல் பருமன் செக்ஸ் எனர்ஜியை பாதிக்குமா?! appeared first on Dinakaran.