ஈரோடு மாவட்டத்தில் 192 மி.மீ. மழை

 

ஈரோடு, அக். 31: ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி நிலவரத்தின் படி அதிகபட்சமாக 192.50 மி.மீ. மழை பெய்திருந்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டி வந்த நிலையில், தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

இருப்பினும், எதிர்பார்த்த மழை பெய்யாத நிலையில், இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் தவிர ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் மதியம் 3 மணி முதல் இரவு வரை மழை பெய்தது. குறிப்பாக, ஈரோடு நகரில் 3 மணிக்கு இடி மின்னலுடன் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளான பவானி, கோபி, பெருந்துறை உள்பட பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பெருந்துறையில், அதிகபட்சமாக 40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன் தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: ஈரோடு 20, கோபி 23, பவானி 19.40, பெருந்துறை 40, கொடுமுடி 6, மொடக்குறிச்சி 1.20, கவுந்தப்பாடி 09.40, எலந்தக்குட்டை மேடு 05.40, அம்மாபேட்டை 23.40, பவானிசாகர் அணை 02.40, கொடிவேரி அணை 03, குண்டேரிப்பள்ளம் அணை 07.80, வறட்டுப்பள்ளம் அணை 23.30.

The post ஈரோடு மாவட்டத்தில் 192 மி.மீ. மழை appeared first on Dinakaran.

Related Stories: