3-5-2022 – செவ்வாய்க்கிழமை – அட்சய திருதியைஇந்த முறை அட்சய திருதியை செவ்வாய்க்கிழமை எனும் மங்கல நாளில் அமைந்திருக்கிறது. ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் உச்ச மடையும் நாளில் அமைந்திருக்கிறது. ரோகிணி நட்சத்திரம் அமைந்த ராசி ரிஷபம். சுக்கிரனுக்குரிய ராசி. சுக்கிரனுக்குரிய மஹாலஷ்மி அருளை அள்ளித்தரும் ராசி. அட்சய திருதியை நாளின் பெருமை குறித்து பலவித புராணங்களில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எதைச் செய்தாலும் நிறைவு தருகின்ற வகையில் ஒன்று நூறு ஆயிர மாகப் பல்கிப் பெருகுகின்ற நன்னாள் அட்சய திருதியை. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்று தான். அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள். அக்ஷய திருதியை அன்று தான தர்மத்தை அதிகம் செய்ய வேண்டும். தர்மத்தின் மூலமாக நமக்கு பலவிதமான நன்மைகளும், ஆடை, ஆபரணங்கள், செல்வம், தங்கம், வெள்ளி, முதலியன சேரும். அமாவாசைக்கு 3வது நாள் திருதியை. 3ம் எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குருவுக்கு உரிய உலோகத்தில் ஒன்று மஞ்சள் நிறமுடைய தங்கம். இதனால், தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்கு வதும் தானம் செய்வதும் சிறப்பு பெறுகிறது.3-5-2022 – செவ்வாய்க்கிழமை – மங்கையர்க்கரசியார் குரு பூஜைமங்கையர்க்கரசியார், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழநாட்டு இளவரசி மங்கையர்க்கரசியார். மதுரை பாண்டியனை (நின்ற சீர் நெடுமாறன்) மணந்தார். அப்பொழுது பாண்டிய நாடு சமணம் தழுவி இருந்தது. அரசனும் சமணத்தைப் பின்பற்றி இருந்தான். சைவத்தை தனது தவநெறியாகப் பின் பற்றிய மங்கையர்க்கரசி, பாண்டி நாட்டில், மீனாட்சி அம்மன் திருக்கோயில் இருக்கக்கூடிய கூடல் நகரில், சைவ நெறி தழைக்க வேண்டும் என்று விரும்பினார். குலச்சிறையார் என்கின்ற சைவப்பெரியாரை துணை கொண்டு திருஞான சம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தார். அப்பொழுது இறை அருளால் பாண்டிய மன்னனுக்கு கொடுமையான சூலை நோய் வந்தது. அந்த நோயை சமணர்களால் தீர்க்க முடியவில்லை. அப்பொழுது திருஞானசம்பந்தர்,மந்திர மாவது நீறுவானவர் மேலது நீறுசுந்தர மாவது நீறுதுதிக்கப் படுவது நீறுதந்திர மாவது நீறுசமயத்தி லுள்ளது நீறுசெந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.என்ற திருநீற்றுப் பதிகம் பாடி மன்னனின் நோயைத் தீர்த்தார்.அதனால், மகிழ்ந்த மன்னன் சம்பந்தரின் அறிவுரை கேட்டு, சைவத்துக்கு மாறினான். அதற்கு உதவியவர் மங்கையர்க்கரசி. தனது விடா முயற்சியினாலும் வேண்டுதலாலும், பொறுமையாலும், தெய்வக் குழந்தையும் ஞானக்குழந்தையுமான திருஞானசம்பந்தரின் பேரருளாலும் மெல்லமெல்ல மதுரையை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றினார். இப்போது உள்ள சம்பந்தர், திருமடம் அப்போது ஏற்பட்டதுதான். இதற்குக் காரணம் மங்கையர்க்கரசி. அவருடைய குரு பூஜை தினம் இன்று.4-5-2022 – புதன்கிழமை – அக்னி நட்சத்திரம் – பகளாமுகி ஜெயந்திஇன்று கௌரி விரதம். அக்னி நட்சத்திரம் ஆரம்பம். இது ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் பஞ்சாங்கப்படி சூரியன் பரணி நட்ஷத்திரம் மூன்றாம் பாதத்தில் தொடங்கி, கிருத்திகை நட்ஷத்திரம் முழுவதும் வலம்வரும் காலகட்டமாகும். சூரியன் மேஷ ராசியில் உலவும் உச்ச வெயில் காலம் அக்னி நட்சத்திரம். அருச்சுனன் காண்டவவனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம். அக்னி நட்சத்திரத்தின் போது, திருவண்ணாமலையில் உள்ள அருணாச்ச லேஸ்வரருக்கு தாராபிஷேகம் செய்வார்கள்.அக்னியில் செய்யக்கூடாத செயல்கள்குறிப்பாகக் கிணறு வெட்டுதல், பூமிபூஜை செய்வது, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது, விதை விதைப்பது, மரம் வெட்டுவது, குழந்தைகளுக்குக் காதுகுத்தி மொட்டை போடுவது ஆகியனவற்றைசெய்யக்கூடாது. ஏற்கனவே கட்டி முடித்துத் தயாராக உள்ள வீட்டில் குடியேறலாம். வாடகை வீட்டை மாற்றலாம். உபநயனம், பெண்பார்த்தல், நிச்சய தார்த்தம், சீமந்தம் ஆகிய சுப காரியங்களையும் செய்யலாம். முக்கியமாக தானம் செய்ய வேண்டும். உணவு, நீர், உடை ஆகியனவற்றை தானம் செய்ய வேண்டும்.இன்றைய தினம் பகளாமுகி ஜெயந்தி. இன்று (புதன்கிழமை) நள்ளிரவு வரை இருக்கிறது. பராசக்தியின் பத்து வடிவங்களில் பூஜிக்கத் தகுந்த வடிவங்களில் (தச மகா வித்யா) பகளாமுகி தேவிக்கு திருநெல்வேலி தெற்கு பாப்பாங்குளம் கல்லிடைக்குறிச்சி அருகே திருக்கோயில் அமைந்துள்ளது. பகளாமுகி தேவியை வணங்கினால், பூர்வஜென்ம தோஷங்கள், சாபங்கள், செய்வினை தோஷங்கள், கடன்தொல்லை, கண்திருஷ்டி, பித்ரு சாபம் போன்றவை நீங்கும் வாழ்வில் சுபிட்ஷம் சேரும். தீர்க்காயுள், வியாபார அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், கல்வி, நல்ல வேலை, பதவி உயர்வு, வழக்குகளில் வெற்றி ஆகியன கிடைக்கும். நவ கிரகங்களில் செவ்வாய் தோஷங்களை பகளாமுகி தேவி போக்குவார் என்று சொல்லப்படுகிறது.5-5-2022 – வியாழக்கிழமை – ஸ்ரீராமானுஜர் ஜெயந்திகுருவுக்குரிய நாள் வியாழக்கிழமை. வியாழனை குருபகவான் என்றுதான் சொல்லுகின்றோம். அனைத்துலகும் வாழ பிறந்த எதிராக மாமுனிவன் என்று போற்றப்படும் “லோக குரு”வான ஸ்ரீராமானுஜரின் அவதார நன்னாள் இன்றைய தினம். ஸ்ரீராமானுஜர் கி.பி. 1017ஆம் ஆண்டு வியாழக்கிழமை சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவர்.ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும் வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் – ஏழ்பாரும் உய்ய எதிராசர் உதித்தருளும் “சித்திரையில்செய்ய திருவாதிரைஎன்று மாமுனிகள் இயற்றிய உபதேச இரத்தின மாலை, இராமானுஜர் அவதாரத்தைச் சிறப்பாகக் கூறும். வேதத்தின் உபநிடத வாக்கிய சூத்திரங்களான பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் செய்ததன் மூலம், அவர் வேதத்தின் பெருமையை உலகறியச் செய்தார். தமிழ் வேதமான திருவாய்மொழியை நாடெங்கும் பரப்பி, அதன் மூலமாகவும், உபயவேதங்களையும் காத்தார் என்பது இராமானுஜருக்கு கூடுதல் ஏற்றம். வேதத்தையும், வேத தர்மத்தையும் காப்பதற்காக, 74 சிம்மாசனாதிபதிகளையும் நியமித்தார். அதைப்போலவே இராமானுஜர் பற்பல வாதப் பிரதிவாதங்களை நடத்தினார். அதன் மூலமாக யாதவப் பிரகாசர் தொடங்கி, யங்ஜமூர்த்தி வரையில் வென்று, தம்முடைய சமய மரபுக்கு கொண்டு வந்தார். அவர் எந்த சாஸ்திர தர்க்க வாதங்களிலும் தோற்றது கிடையாது. அரங்கனுக்குக் கைங்கரியம் செய்து கொண்டு திருவரங்க செல்வம் முற்றும் திருத்தி வைத்து திருவரங்கக் கோயிலின் ஏற்றத்தை திக்கெல்லாம் பரப்பியவர் இராமானுஜர். உலக மக்களின் நன்மை ஒன்றையே கருதி, திருக்கோட்டியூரில், தாம் மிகவும் கஷ்டப்பட்டு அறிந்த, ஆன்மீகப் பொருளை (மந்திரப் பொருள்) ‘‘தகுதி உடையவர்கள் எல்லாம் வாருங்கள்” ‘‘ஆசை உடையவர்கள் எல்லாம் வாருங்கள்” என்று அன்போடு அழைத்து, தான் நரகம் அடைந்தாலும் பரவாயில்லை என்று, அனைவருக்கும் அளித்தவர். அவருடைய ஜெயந்தி உற்சவம், இன்று, ஒவ்வொரு வைணவக் கோயில்களிலும், ஒவ்வொரு வைணவ அடியார்களின் இல்லங்களிலும், மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. (6-5-2022 – காலை வரை திருவாதிரை இருப்பதால் சில இடங்களில் 6ம் தேதி அன்றும் கொண்டாடப்படுகிறது) 5-5-2022 – வியாழக்கிழமை- விறன்மிண்ட நாயனார் குருபூஜைசைவ நூல்களில் தலையாய நூல் பெரியபுராணம். ‘‘தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே” என்ற சைவ நெறியை தூக்கிப் பிடிக்கும் பெரிய புராணத்தில் நாயன்மார்களின் கதைகள் விரிவாக கூறப்பட்டுள்ளன. ஆனால், இந்த நூலுக்கு மூல நூல் ஒன்று உண்டு. அது சுந்தர மூர்த்தி நாயனார் சைவ அடியார்களைப் பற்றி எழுதிய “திருத்தொண்டத் தொகை”. சிவனையே பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் சிவனடி யார்களை போற்றுவதற்கு காரணமாக அமைந்த ஒரு நாயனார்தான் விறன்மிண்ட நாயனார். விறன்மிண்ட நாயனார் சேரநாட்டுச் செங்குன்றூரில் வேளாண்குடியில் பிறந்தவர் அவர் சிவனடியாரிடத்தே பெரும் பக்தி பூண்டவர். சிவனடியைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காதவர். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்குள்ள பெருமானை வணங்குவதற்கு முன்பாக, சிவனை பூஜித்து வந்த அடியார்களை வணங்குவதை வழக்கமாகக் கொண்டவர்.இவர் ஒரு முறை திருவாரூர் வந்தார். அங்கு சில நாள் தங்கினார். அந்நாளில் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த திருக்கூட்டத்தைக் கண்ட சுந்தரர், அவர்களை தொந்தரவு செய்யவேண்டாமென எண்ணி ஒருவாறு ஒதுங்கிச் சென்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் கண்ணுற்ற விறன்மிண்ட நாயனார், ‘இவன் திருக்கூட்டத்தாரை வழிபடாது கோயிலுக்கு செல்கின்றானாதலால் திருக்கூட்டத்திற்கு இவனும் புறம்பாக இருக்கின்றான். அடியார்களை மதிக்காத இவனையாண்ட சிவனும் இனி புறகு என்று கூறினார்.விறன்மிண்டரது அடியார் பக்தித் திறத்தை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர்க் கோயிலுட் புகுந்து தியாகராசப் பெருமானைக் கும்பிட்டு நிற்கும் போது பெருமான் “நீ அடியாரை மதிக்காததால் நம்மையும் புறம் தள்ளி விட்டார் நமது அன்பர் விறன்மிண்ட நாயனார். சுந்தரா, நாம் அடியாருடன் உளோம். அடியாரைப்பாடு என்றருளி “தில்லைவாழந்தணர்” என அடியெடுத்துக் கொடுத்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை “தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்பதை முதலாகக் கொண்டு பாடியருளினார். இவ்வண்ணம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகை பாடுவதற்குக் காரணமாய் அமைந்த விறன்மிண்டநாயனார், பெருமாள் அருளால் திருவடி நிழலை அடைந்து கணநாதராய் விளங்கும் பேற்றினைப் பெற்றார்.6-5-2022 – வெள்ளிக்கிழமை – ஸ்ரீசங்கரர் ஜெயந்திஇந்திய சமய மரபின் மூன்று மிகச் சிறந்த தத்துவங்கள் அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம். இதில் அத்வைதத்தத்துவங்களை உலகெங்கும் பரப்பியவர் ஸ்ரீசங்கரர். ஸ்ரீசங்கர ஜெயந்தியானது சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் சுக்லபட்ச பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஸ்ரீசங்கரர் ஏழாம் நூற்றாண்டு. இன்றைய கேரளத்திலுள்ள ‘‘காலடி” எனப்படும் ஊரில் ஆர்யாம் பாள், சிவகுரு தம்பதியினருக்கு மகனாய்த் தோன்றியவர். எட்டு வயதில் சந்நியாசம் பெற்று துறவறம் ஏற்றார். இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் (பிரஸ்தானத்திரயம்) என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத்கீதைக்கு அத்வைத பரமான விளக்கவுரை அளித்தார். அத்வைத வேதாந்தம் அதாவது, இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்டினார். விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் சிறந்த விளக்கவுரை எழுதினார். இந்தியாவில் பலகாலம் கடைப்பிடிக்கப்பட்ட தர்மத்தை நிலைநாட்ட பாரதம் முழுதும் திக்விஜயம் செய்தார். கபாலிக சமயத்தை தடுத்தார். கோவில்களில் உயிர்ப்பலியை தடுத்தார். ஜீவகாருண்யத்தை எடுத்துரைத்தார். சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு அனைத்து சங்கர மடங்களிலும் சிறப்பு பூஜைகள், வேத பாராயணம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.6-5-2022 – வெள்ளிக்கிழமை – லாவண்ய கௌரி விரதம்கௌரி என்பது பார்வதியைக் குறிக்கும். கௌரி வடிவங்கள் 108. அதில் 16 வடிவங்கள் ஏற்றம் உடையன. கௌரியான பார்வதிக்கு ஏராளமான விரதங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் லாவண்ய கௌரி விரதம். பெண்கள் அழகுடனும் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் இந்த விரதத்தை பின்பற்றுவர். வீட்டில் கலசம் வைத்து, அம்பாளை அதில் ஆவாகனம் செய்து, மலர்களால் பூஜித்து, நிவேதனம் செய்து வழிபட, மிகச் சிறப்பான பலன்கள் நடைபெறும். குறைந்தபட்சம் அன்றைய தினம் வீட்டில் அம்பாள் படத்திற்கு அலங்காரம் செய்து விளக்கு வைத்து வழிபட வேண்டும். கோயிலுக்குச் சென்று அம்மன் சந்நதியில் விளக்கு வைத்து வழிபடலாம்….
The post இந்த வார விசேஷங்கள் :அட்சய திருதியை appeared first on Dinakaran.