கிசான் திட்ட முறைகேட்டை தொடர்ந்து குமரியில் மற்றொரு மோசடி அரங்கேற்றம் : கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் போலி உறுப்பினர்கள்!!

கன்னியாகுமரி:  உழவர் நிதி உதவி முறைகேட்டை தொடர்ந்து அரசு மானியத்தை பெற போலி உறுப்பினர்களை சேர்த்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலும் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (Tamil Nadu Handloom Weavers Cooperative Society), என்பது இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள பாராம்பரிய கைத்தறி நெசவாளர்களை ஒருங்கிணைக்கும் கூட்டுறவு அமைப்பாகும். இது பெரும்பாலும் கோ-ஆப்டெக்ஸ் என்றே அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் கைத்தறி, துணிநூல், காதி, கிராமத்தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள் துறையினால் இவ்வமைப்பு நிர்வகிக்கப்படுகிறது.

இதனையடுத்து, தமிழகத்தில் மொத்தம் 1,133 தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் 2.46 லட்சம் கைத்தறிகளுடன் இயங்கி வருகின்றன. இந்த சங்கங்களில் பல்வேறு வகைப்பட்ட கைத்தறி துணிகள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1,050 கோடிக்கு விற்கப்படுகின்றன. இதையடுத்து, கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 இணை இலவச சீருடை வழங்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

இதனால், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி மானியம் ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கைத்தறி நெசவு நலிவடைந்ததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டுள்ளன. குறைந்தளவில் மட்டுமே இயங்கி வரும் சங்கங்களில் அதிகளவு போலி உறுப்பினர்களை சேர்த்து மோசடி நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் உற்பத்தி செய்யாத வேட்டி ரகங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ததாக கணக்குக்காட்டி அரசு மானியங்களை பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. கைத்தறி விற்பனைக்கு மத்திய மாநில அரசுகள் வழங்கும் 20 சதவீத மானியத்தை பெற போலி கணக்குகளை காட்டி மாநிலம் முழுவதும் கோடிக்கணக்கில் இதுபோன்ற மோசடி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இவற்றில் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: