சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்துநிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தற்காலிக பேருந்துநிலையம் அமைப்பது கடந்த சில ஆண்டுகளால தமிழக அரசு செய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருவதால் பேருந்துகள் பிரித்து இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் நீண்ட தூரம் செல்லும் விரைவுபேருந்துகள் புறநகர் பகுதியாக வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ள கோயம்பேடு உள்ளிட்ட 5 பேருந்து நிலையங்களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படும். சுகாதாரத் துறை, மாநகராட்சி, உள்ளாட்சித் துறையுடன் இணைந்துபணிகளை மேற்கொள்ளவுள்ளோம்.
தற்போதுள்ள மாநகர பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் வந்து செல்ல வசதியாக, நடைமேடைகள் அமைத்தல், நிழற்குடைகள் அமைப்பது, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தற்காலிக தீயணைப்பு மையங்கள், பயணிகள் குறைதீர் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கிருந்து மாநகரின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதேபோல், ஆம்னி பேருந்துகளும் இந்த பேருந்து நிலையம் உள்ளே வந்து செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது இவ்வாறு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.