ஆவடி அருகே ₹2.14 கோடி நில மோசடி வழக்கில் ஒருவர் கைது: கூட்டாளிகளுக்கு வலை

ஆவடி, அக். 28: ஆவடி அருகே போலி ஆவணங்கள் மூலம் ₹2.14 கோடி நில மோசடி வழக்கில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட அம்பத்தூர் அருகே பாடி, மண்ணூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஜான்வெஸ்லி(50). இவர், கடந்த 2013ம் ஆண்டு ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அப்புகாரில், அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை கிராமத்தில் ஜான்வெஸ்லிக்கு சொந்தமான 5,825 சதுர அடி காலி நிலம், அவரது தாயார் லீலாவதியின் பெயரில் இருந்தது. இந்நிலத்தை ஜான்வெஸ்லி மற்றும் அவரது சகோதரி கிறிஸ்டிபெல் ஆகியோர் அனுபவித்து வந்துள்ளனர். இதற்கிடையே ஜான்வெஸ்லியின் தாயார் பெயரில் இருந்த ₹2.14 கோடி மதிப்பிலான நிலத்தை துரைராஜ், பிலால் அகமது, சதீஷ் ஆகிய 3 பேரும் போலி ஆவணங்கள் மூலமாக பிறருக்கு விற்பனை செய்து நிலமோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜான்வெஸ்லி குறிப்பிட்டிருந்தார்.

இப்புகாரின்பேரில், ஆவடி காவல் ஆணையரக ஆணையர் கே.சங்கர், துணை ஆணையர் பெருமாள் ஆகியோர் உத்தரவின்படி, உதவி ஆணையர் பொன்சங்கர் தலைமையில் தனிப்படையினர் தீவிரமாக விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, நிலமோசடி வழக்கில் ஆந்திர மாநிலம், திருப்பதியில் தலைமறைவாக இருந்த சதீஷ்(42) என்பவரை தனிப்படை ஆய்வாளர் மயில்சாமி மடக்கி பிடித்தார். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், நிலமோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து பிடிபட்ட சதீஷை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக சுற்றி திரியும் துரைராஜ், பிலால் அகமது ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

The post ஆவடி அருகே ₹2.14 கோடி நில மோசடி வழக்கில் ஒருவர் கைது: கூட்டாளிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: