ஆடி காற்றின் வேகத்தில் இருந்து பயிர்களை காப்பது எப்படி? தோட்டக்கலைத்துறையினர் விளக்கம்

ஆண்டிபட்டி: ஆடி மாதம் முதல் காற்றின் வேகம் சராசரி அளவை விட அதிகமாக இருக்கும். அதிவேக காற்றானது மரங்கள் மற்றும் மென்தண்டு தரவரங்களை சேதப்படுத்தும். மரங்கள் முற்றிலும் ஒடிந்து வேரோடு சாய்ந்தும் விடும். இதனால் இதுபோன்ற நேரத்தில் பயிர்களை காப்பாற்றுவது தொடர்பாக தோட்டக்கலைத்துறையினர் விவசாயகளுக்கு பயனுள்ளதகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு: நன்கு வளர்ந்த மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைக்கலாம். காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றி விடலாம். காற்று நன்கு புகுந்து செல்லும் வண்ணம் கிளைகளை கவாத்து செய்யலாம். வாழை போன்ற மெல்லிய தண்டு மரங்களுக்கு காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் சவுக்கு, தைல மர குச்சிகளால் முட்டு கொடுத்து செடிகள் சாயா வண்ணம் பாதுகாக்கலாம். மரங்களை சுற்றி மண் அணைத்து பாதுகாக்கலாம். குறிப்பாக வாழை மரங்களில் கீழ்மட்டத்திலுள்ள இலைகளை அகற்றி விட்டு பின் மண் அணைக்க வேண்டும். பூக்கள், பந்தல் மற்றும் இதர காய்கறி பயிர்களில் காய்ந்து போன இலைகளை அகற்றிட வேண்டும். பசுமைக்குடில் சாகுபடி மற்றும் நிழல்வலை குடில் போன்றவற்றிற்கு அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட வேண்டும்.

உள்பகுதியில் காற்று உட்புகாதவாறு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடியிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அருகில் மரங்கள் இருப்பின், அவை நல்ல நிலையில் உள்ளனவா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். பட்டுப்போன, காய்ந்துபோன மரங்கள் மற்றும் கிளைகள் பசுமை குடிலினை பாதிக்கா வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். பசுமை குடிலின் மேற்கூரை காற்றினால் சேதமாகாத வண்ணம் குறுக்கும் நெடுக்குமாக மெல்லிய கம்பிகள் மூலம் கட்டலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.

The post ஆடி காற்றின் வேகத்தில் இருந்து பயிர்களை காப்பது எப்படி? தோட்டக்கலைத்துறையினர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: