அரவக்குறிச்சி, மார்ச் 5: அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சியில் 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி கரூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இதில், 500க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். 11ஆம் வகுப்பிற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சேர்கின்றனர்.
இது இருபாலர் பள்ளியாக உள்ளதால் தயக்கம் உடைய பெற்றோர்கள் அருகில் உள்ள பள்ளபட்டி பெண்கள் பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். விருப்பமற்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளை பத்தாம் வகுப்பு உடன் இடைநிறுத்தி விடுகின்றனர். இதனால், மாணவிகள் பிளஸ் 2 செல்ல இயலாமல் இடைநீற்றல் அதிகமாகி பெண்களின் கல்வி முன்னேற்றம் தடைபடுகிறது.
எனவே, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதன் மூலமாக அனைத்து பெண் குழந்தைகளும் ப்ளஸ் 2 முடித்து தங்களுடைய உயர் கல்வியை தொடர்வதற்கு எளிமையாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என பெற்றோர்கள் கூறுகின்றனர். எனவே அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை பனிரெண்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்தி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை appeared first on Dinakaran.