×

அரசு மகளிர் கல்லூரியில் ₹1 கோடியில் வகுப்பறைகள்

 

கிருஷ்ணகிரி, ஏப்.27: கிருஷ்ணகிரியில் ஐவிடிபி பங்களிப்புடன், ₹1 கோடி மதிப்பில் அரசு மகளிர் கல்லூரியில் கட்டப்பட்ட 5 வகுப்பறைகள் உள்பட ₹1.97 கோடி மதிப்பிலான கட்டிடங்களை அமைச்சர் காந்தி பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி தாலுகாவில் 5 புதிய ரேஷன் கடைகள், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஐவிடிபி தொண்டு நிறுவன பங்களிப்புடன் ₹1 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ₹36.99 லட்சம் மதிப்பில் அறுவை அரங்கு, எக்ஸ்ரே மையம், சி.டி. ஸ்கேன் மையம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மதியழகன் எம்எல்ஏ மற்றும் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டு புதிய ரேஷன் கடைகள், வகுப்பறை கட்டிடங்கள், அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும் ₹50 லட்சம் மதிப்பில் காசநோய் கண்டறியும் உபகரணங்கள் பொறுத்தப்பட்ட நடமாடும் ஊர்தி மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இந்தியன் வங்கியின் புதிய கிளை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது: பர்கூர் தாலுகா, பாலிநாயனப்பள்ளி ஊராட்சி, அழகியபுதூர் கிராமம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் குடிமேனஅள்ளி ஊராட்சி, மிட்டஅள்ளி ஊராட்சியில் தொட்டிப்பள்ளம் கிராமம், ராயக்கோட்டை ஊராட்சி ரஹமத் காலனி மற்றும் எடவனஅள்ளி ஊராட்சி என மொத்தம் 3 முழுநேர கடைகள், 2 பகுதி நேர கடைகள் என மொத்தம் 5 ரேஷன் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த கடைகளில் எவ்வித சிரமுமின்றி பொருட்களை வாங்கி பயன்பெறலாம். அதேபோல், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், தன்னிறைவு திட்டம் 2019-2020ன் கீழ், ₹1 கோடி மதிப்பில் 5 வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் மூலம் ₹50 லட்சம் பங்களிப்பாகவும், ₹50 லட்சம் அரசு நிதி என மொத்தம் ₹1 கோடி மதிப்பில் 5 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் இளங்கலை, முதுங்கலை, எம்.பில் உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

வகுப்பறைகள் பற்றாக்குறையின் காரணத்திற்காக இக்கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும், உயர்கல்வித்துறை சார்பில் ₹3.64 கோடி மதிப்பில், 9 அறிவியல் ஆய்வக கட்டிடங்களுக்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, மாணவ, மாணவிகள் உயர் கல்வியை முடித்து, பல்வேறு போட்டித்தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ₹36.99 லட்சம் மதிப்பில் அறுவை அரங்கு, எக்ஸ்ரே மையம், கிருஷ்ணகிரி நகரில் உள்ள மருத்துவமனையில் இயங்கி வந்த சிடி ஸ்கேன் மையம், நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை வழங்கும் பொருட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், ₹50 லட்சம் மதிப்பில் அதிநவீன காசநோய் கண்டறியும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட நடமாடும் ஊர்த்தி துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், துணை பதிவாளர் குமார், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி, இந்தியன் வங்கி மண்டல பொதுமேலாளர் பழனிகுமார், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் கோவிந்தராசு, முன்னாள் எம்எல்ஏ முருகன், மவாட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினிசெல்வம், பேரூராட்சி தலைவர் தம்பிதுரை. நகர்மன்ற துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு மகளிர் கல்லூரியில் ₹1 கோடியில் வகுப்பறைகள் appeared first on Dinakaran.

Tags : Govt Women's College ,Krishnagiri ,Government Women's College ,IVDP ,
× RELATED அனைத்து முன்னேற்பாடு பணிகள் தயார்...