சென்னை, ஆக.23: அதிமுக கவுன்சிலரை துப்பாக்கி முனையில் கடத்திய வழக்கில் 3 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக ஜெ. பேரவை இணைச் செயலாளர். இவரது மனைவி ரோஜா, கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக கவுன்சிலராக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஒரு கும்பல் ரமேஷின் வீடு புகுந்து, அதிமுக கவுன்சிலரான ரோஜா மற்றும் மகன் ஜேக்கப் ஆகியோரை துப்பாக்கி முனையில் காரில் கடத்தி சென்றது.
அன்று மாலையே சத்தியவேடு பகுதியில் அந்த கும்பல், அவர்களை இறக்கி விட்டு சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கும்மிடிப்பூண்டி போலீசார், அதே கிராமத்தை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் அவருடைய நண்பர்கள் சந்தோஷ், நவீன், பாஸ்கர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். பாஸ்கர் மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை அறிவுரைக்குழுமம் ரத்து செய்தது.
இதையடுத்து, தங்களை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சுரேந்திரன், சந்தோஷ், நவீன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தவிர வேறு எந்த குற்ற வழக்கும் மனுதாரர்களுக்கு எதிராக நிலுவையில் இல்லை. நிலப்பிரச்னை காரணமாக இந்த குற்றச்செயலில் மனுதாரர்கள் ஈடுபட்டனர்.
உரிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் இயந்திரத்தனமாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் மனுதாரர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, சுரேந்திரன் உள்பட 3 பேரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவில் விதிமீறல்கள் உள்ளதாக கூறிய நீதிபதிகள், அந்த உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
The post அதிமுக கவுன்சிலரை கடத்திய வழக்கு 3 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.