புதுச்சேரியில் குடும்பம் குடும்பமாகவும், நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சென்றும் வாக்களிக்க தடையில்லை : 144 தடை குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்

புதுச்சேரி : புதுச்சேரியில் குடும்பம் குடும்பமாகவும், நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சென்றும் வாக்களிக்க தடையில்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் பூர்வா தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் அசம்பாவிதங்களை தடுக்க 7ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்வலமாக செல்லவும் ஐந்து நபர்களுக்கு மேல் கூடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  செயலாளர் ராஜாங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு  தொடரப்பட்டிருந்தது.

மேற்கண்ட வழக்கின் விசாரணையின் போது, புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது குறித்து உரிய விளக்கம் தரவில்லையென்றால் தடை உத்தரவை ரத்து செய்ய நேரிடும் என்று அரசுக்கு நீதிபதிகள் எச்சரித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் 144 தடை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரியில் குடும்பம் குடும்பமாகவும், நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சென்றும் வாக்களிக்க தடையில்லை. புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது. 144 தடை உத்தரவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்காது. நாளை வாக்குபதிவின் போது சட்டவிரோதமாக ஆட்கள் கூடுவதை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: