மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரிக்கலி ஊராட்சியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் கடுமையாக போராடி வருகின்றனர். தேவையான பாசன நீர் கிடைக்காமல் நெற் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரிக்கிலி ஊராட்சியை சேர்ந்த விவசாயி பார்த்திபன் உள்பட பல விவசாயிகள், தனியாரிடம் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி டிராக்டரில் பொருத்தப்பட்ட டேங்கர் மூலம் நெல் பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘’வறட்சி காரணமாக சாகுபடி செலவுகள் அதிகரித்துள்ளதுடன் தற்போது தண்ணீருக்கே கூடுதல் செலவு செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வுசெய்து உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
