×

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: அர்ஜெண்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி..!

நியூஜெர்சி: 23வது பிபா உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது.

போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90+3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது. கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார்.

அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர். இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2010-ம் ஆண்டு முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

Tags : World Cup Soccer Finals ,Spain ,Argentina ,New Jersey ,23rd FIFA World Cup football ,MetLife Stadium ,New Jersey, USA ,
× RELATED திமுக சட்டமன்ற உறுப்பினர்...