×

பயிர்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி, ஜூலை 14: பொன்னேரியில் பயிர்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரியில் பயிர்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தற்போது அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, பாரபட்சமின்றி அனைத்து கூட்டுறவு கடன் சங்க கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரியில் நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, பொன்னேரி அண்ணா சிலையில் இருந்து தேரடி சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை சந்திப்பு வழியே பொன்னேரி ஆர்டிஒ அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடியும், முழக்கங்களை எழுப்பியும் பேரணி சென்றனர். தொடர்ந்து ஆர்டிஒ அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல சிறு குறு விவசாயிகளுக்கு முழுமையான பயிர் கடன் தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை உடனே நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3500 வழங்க வேண்டும். மேலும், கரும்பு டன்னுக்கு ரூ.4500 வழங்க வேண்டும். முறையாக பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் பயிர் காப்பீடு வழங்குவதில் உள்ள ரேண்டம் முறையினை கைவிட்டு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Ponneri ,Tamil Nadu ,
× RELATED பள்ளிப்பட்டில் பராமரிப்பாளர் ஓய்வு...