×

பள்ளிப்பட்டில் பராமரிப்பாளர் ஓய்வு பெற்றதால் மூடப்பட்ட பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

பள்ளிப்பட்டு, ஜூலை 14: பள்ளிப்பட்டில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் பணியாற்றி வந்த இரவு காவலர் ஓய்வு பெற்றதால் ஆய்வு மாளிகை பராமரிக்க ஆள் இல்லாமல் இழுத்து மூடப்பட்டுள்ளதால் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் அதிகாரிகள் ஓய்வு எடுக்க இட வசதியின்றி திருத்தணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு சட்டமன்ற தொகுதியாக இருந்தபோது, முன்னாள் எம்எல்ஏ ராமன் பெரும் முயற்சியால் நெடுஞ்சாலைத்தூறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம், அரசுத்துறை அலுவலர்கள் ஓய்வு எடுக்க பொதுப்பணித்தூறை ஆய்வு மாளிகை உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களை ஏற்படுத்தினார்.
தொகுதிகள் மறு சீரமைப்புக்கு பிறகு, 2011ல் பள்ளிப்பட்டு தொகுதி திருத்தணி தொகுதியாக மாற்றப்பட்டது.

இதனால், பள்ளிப்பட்டில் அரசு அலுவலகங்கள் முறையாக கண்டு கொள்ளாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் உயர் அதிகாரிகள் மக்கள் பிரதிதிகள் ஓய்வு எடுக்க பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை பயன்படுத்தி வந்தனர்.

கடந்த, ஓராண்டுக்கு முன்பு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் பணியாற்றி வந்த இரவு காவலர் ஓய்வு பெற்றதால் தொடர்ந்து ஆய்வு மாளிகை பராமரிக்க ஆட்கள் இல்லாத நிலையில் இழுத்து மூடப்பட்டது. ஓராண்டுக்கு மேலாக ஆய்வு மாளிகை பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. இதனால், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஓய்வு எடுக்க இடவசதி இல்லாததால் திருத்தணிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை திருத்தணி கோட்ட உதவி செயற்பொறியாளரிடம் பலமுறை புகார் செய்தும் கண்டுக் கொள்ளவில்லை என்று அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் குற்றம் சாட்டினர். ஆய்வு மாளிகை சீரமைத்து பராமரிக்க பணியாளர் நியமித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Public Works Department Research House ,Pallipattu ,
× RELATED பயிர்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய...