* 30 கிமீ சாலையில் 30 அபாயகர வளைவுகள்
திருத்தணி: திருத்தணி – பொதட்டூர்பேட்டை – பள்ளிப்பட்டு இடையில் 30 கி.மீ தூரம் கொண்ட மாநில நெடுஞ்சாலையில் அபாயகரமான 30 வளைவுகள் இருப்பதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து, பயண நேரத்தை குறைக்க சாலையை நேர்ப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் இருந்து தெக்களூர், புச்சிரெட்டிப்பள்ளி, பொதட்டூர்பேட்டை வழியாக ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு வரை 30 கிமீ தூரம் நீளம் கொண்ட சாலை 2006ம் ஆண்டுக்கு முன்பு வரை மாவட்ட இதர சாலையாக இருந்தது.
2006ல் திமுக ஆட்சி அமைந்த பின்னர் பள்ளிப்பட்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமன் அப்போதைய முதலமைச்சர் கலைஞரிடம் முதல் கோரிக்கையாக திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை வழியாக பள்ளிப்பட்டு வரை செல்லும் சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டு மாநில நெடுஞ்சாலையாக (106) தரம் உயர்த்தப்பட்டது. ஒருவழி சாலையாக இருந்த இச்சாலை விரிவுப்படுத்தப்பட்ட பின்னர் ஓரளவு வாகன நெருக்கடி குறைந்து கனரக வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களும் எளிதில் கடந்து சென்று வர வசதி ஏற்பட்டது.
மாநில நெடுஞ்சாலை தரம் உயர்த்தப்பட்டு தற்போது 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் வாகனங்கள், மக்கள் தொகை பெரும் அளவில் அதிகரித்துள்ளது. வேலை தேடி பலரும் வெளியூர் சென்று வருகின்றனர். இந்நிலையில் 30 கிமீ தூரம் கொண்ட திருத்தணி – பள்ளிப்பட்டு இடைப்பட்ட சாலையில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், திருத்தணி முதல் பொதட்டூர்பேட்டை வரை 20 கிமீ நீளம் கொண்ட மாநில நெடுஞ்சாலையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட அபாயகரமான வளைவுகள் உள்ளது. பொதட்டூர்பேட்டையிலிருந்து பள்ளிப்பட்டு வரை 5 இடங்களில் வளைவுகள் உள்ளன.
தினமும் ஏராளமான கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வரும் இச்சாலையில் கொண்டை ஊசி வளைவுகள், குறுகலான வளைவுகள் உட்பட அபாயகரமான வளைவுகள் இருப்பதால் வாகனங்கள் அவ்வப்போது நேருக்கு நேர் மோதி பலருக்கு படுகாயம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் வளைவு பகுதிகளில் விபத்து பகுதி எச்சரிக்கை பலகைகள், ஏரிக்கரை பகுதிகளில் சாலைக்கு இருபுறமும் அலுமினிய தகடுகள், ஒளிரும் ஸ்டிக்கர் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிந்தாலும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் ஒரு கி.மீ தூரத்திற்கு ஒரு அபாயகரமான வளைவுகள் உள்ளதால் விபத்து ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. மேலும் திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டைக்கு 20 கி.மீ தூரம் பயணம் செய்ய பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் ஒருமணி நேரம் தேவைப்படுகிறது.
தீர்வு காணப்படும்; திருத்தணி எம்.எல்.ஏ கோ.அரி
திருத்தணி, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வரும் 106 மாநில நெடுஞ்சாலையில் அபாயகரமான வளைவு பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையை நேர்ப்படுத்த வேண்டும். இதற்காக சாலைக்கு இருபுறமும் நிலம் கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளதால் சட்டமன்றத்தில் பதிவு செய்து அரசு அனுமதி பெற்று, திருத்தணி- பொதட்டூர்பேட்டை-பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலை வளைவு பகுதிகள் நேர்ப்படுத்தி பயண நேரத்தை குறைத்து பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தணி கோ.அரி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
சாலையை நேர்ப்படுத்தினால் தூரம், பயண நேரம் குறையும்
திருத்தணி, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு இடையே 100 கிராம மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தவும், பயண நேரம் மற்றும் சுமார் 6 கி.மீ தூரத்தை குறைக்கவும் வளைவு பகுதிகளை முழுமையாக சர்வே செய்து சாலைகளை நேர்ப்படுத்தினால், பயண நேரம் வெகுவாக குறைந்து, 6 முதல் 7 கிமீ வரை நீளம் குறையும். இதனால், விபத்துகளை பெரும் அளவில் தவிர்க்கலாம் என்பது வாகன ஓட்டிகள், கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
