×

பூசாரியை மிரட்டி மாரியம்மன் கோயில் கருவறையில் விஜய் படத்தை வைத்து பூஜை: தவெகவினர் அட்ராசிட்டி

 

நாமக்கல்: நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பலபட்டறை மாரியம்மன் கோயில் உள்ளது. அனைத்து சமூகத்தினருக்கும் இந்த கோயிலில் சாதி பாகுபாடு இன்றி வழிபாடு செய்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இந்த கோயில் உள்ளது. கடந்த 22ம் தேதி தமிழக முதல்வர் விஜயின் பிறந்ததினத்தையொட்டி, தவெகவினர் இந்த கோயிலின் கருவறையில் விஜயின் படத்தை வைத்து பூஜை செய்து, அட்ராசிட்டி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விஜயின் பிறந்ததினத்தையொட்டி, தவெகவினர் விஜயின் போட்டோவுடன் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

அந்த போட்டோவை அம்மன் சிலை உள்ள கருவறையில் வைத்து பூஜை செய்யும்படி, கோயில பூசாரி வெங்கடேசிடம் கூறியுள்ளனர். இதற்கு அவர் தயங்கியுள்ளார். பின்னர் தவெகவினர் எந்த பிரச்னையும் வராது, நாங்கள் பார்த்து கொள்கிறோம் என கூறியுள்ளனர். இதனால் கருவறையில் விஜயின் படத்தை வைத்து பூசாரி வெங்கடேசன், விஜயின் நட்சத்திரத்தை குறிப்பிட்டு அர்ச்சனை செய்துள்ளார். பின்னர் தீபாரதனை காட்டப்பட்டு முதல்வரின் படம் கருவறையில் இருந்து எடுக்கப்பட்டு கட்சியினரிடம் பூசாரி கொடுத்துள்ளார். இது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளிவந்த உடன், இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பூசாரி வெங்கடேசை அழைத்து கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், கட்சியினர் மிரட்டியதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் அவர்கள் கூறியபடி பூஜை செய்து முடித்தேன் என தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்ததினத்தையொட்டி, கட்சியினர் இந்த கோயிலிலில் வழிபாடு செய்துள்ளனர். அப்போது கட்சியினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவார்கள். தலைவர்களின் பெயருக்கு அர்ச்சனை மட்டுமே செய்யப்படும். இதுபோல கருவறையில் தலைவர்களின் படத்தை வைப்பது இல்லை என கோயில் பூசாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vijay ,Mariamman temple ,Thavekas ,Namakkal ,Palapattara Mariamman ,Hindu Religious and Charitable Trusts Department ,22nd ,Tamil Nadu… ,
× RELATED சிறுமுகை அருகே தாயை பிரிந்த குட்டி...