தியாகராஜநகர்: தமிழகத்தில் தென் மாவட்டங்களின் வானிலையை துல்லியமாக கணிக்க ரேடார் அமைப்பது அவசியமாகும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெல்லை வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்த கருத்து: நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் வானிலையை கணிக்க கேரளாவில் உள்ள கொச்சின் மற்றும் திருவனந்தபுரம் ரேடாரை தான் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. எனவே பருவநிலை மாற்றத்தின் காரணமாக வானிலையை நாம் துல்லியமாக கண்காணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். தென் மாவட்ட மக்களின் நிலையை கருத்தில் கொண்டு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வளாகம் அல்லது குலசேகரன்பட்டினம் பகுதியில் ஒரு ரேடார் அமைக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் ரேடார் அமையும் பட்சத்தில் மேகங்களின் வேகம் மற்றும் அவை நகரும் திசையையும் நிகழ்நேரத்தில் துல்லியமாக கணிக்க இயலும். மழை மேகங்களின் அடர்த்தி மற்றும் மழையின் அளவு அதன் தீவிரத்தை துல்லியமாக கணக்கிட முடியும். மிக அதிக மழைப்பொழிவு எங்கு ஏற்படக்கூடும் என்பதை அறிந்து, நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஏற்படும் திடீர் வெள்ளத்தை தடுக்கவும், மக்களை அப்புறப்படுத்தவும் இது வழிவகுக்கிறது. சாதாரண வானிலை அமைப்புகளை விட, டாப்ளர் ரேடார் மிக விரைவாக எச்சரிக்கைகளை வழங்குவதால், மாவட்ட நிர்வாகமும் பேரிடர் மீட்புக்குழுக்களும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற போதிய அவகாசம் கிடைக்கிறது.
வானிலை முன்னறிவிப்புகளை 100% நம்பகத்தன்மையுடன் வழங்கவும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் சேதங்களை பெருமளவு குறைக்கவும் வானிலை ஆய்வு மையங்களுக்கு டாப்ளர் ரேடார் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. தென் மாவட்டத்தில் ரேடார் அமைக்கப்பட்டால் வானிலையை 100% நம்பகத்தன்மையுடன் கணிக்க முடியும். மேலும் மழையின் தீவிரம் ஆலங்கட்டி மழையா? மிக கனமழையா? என்பது குறித்தும் அறிந்து கொள்ள முடியும். ரேடார் அமையும் பட்சத்தில் நிகழ் நேர வானிலை அறிவிப்பு 100% துல்லியமாக இருக்கும். மேலும் பல லட்சகணக்கான தென் தமிழக மக்கள் பயன்பெறுவார்கள்.
ரேடார் அமைக்க தென் தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் தான் குரல் கொடுக்க வேண்டும். இவர்களால் தான் இது சாத்தியம். ரேடார் அமைக்கும் விவகாரத்தை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையம் தான் ரேடார் அமைக்க வேண்டும். இது மாநில அரசு நினைத்தால் முடியாது. ஒன்றிய அரசு தான் முழு பொறுப்பு. நெல்லையில் ரேடார் அமைக்கப்பட்டால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய 13 மாவட்டங்களின் நிகழ்நேர வானிலை அறிக்கையை நாம் துல்லியமாக கணிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
