×

பள்ளி கல்வித் துறையில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது: அன்புமணி

சென்னை: பள்ளி கல்வித் துறையில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. தாமதிக்காமல் உடனடியாக நிரப்ப நடவடிக்கை தேவை என்று அன்புமணி கூறியுள்ளார்.

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. காலியாக இருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்ட பிறகும் கூட, பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் இவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது ஏழை குழந்தைகளின் கல்வியை கடுமையாக பாதிக்கும்.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், ஒட்டுமொத்த ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 1,14,248 என்றும், அவற்றில் கடந்த மே மாத கடைசி பணி நாள் நிலவரப்படி 96,141 ஆசிரியர்கள் பணியில் இருப்பதாகவும், மீதமுள்ள 18,107 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது காலியாக இருப்பதாக கூறப்படும் ஆசிரியர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். கடந்த பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டு, மீதமுள்ள இடங்கள் மட்டுமே காலி பணியிடங்களாக அரசால் கணக்கு காட்டப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித்துறையில் மட்டும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களைக் கொண்ட தொடக்கக் கல்வித்துறையில் குறைந்தது 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும். ஒட்டுமொத்தமாக 34,000 ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்துக் கொண்டு தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?. என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5000 முதல் 6000 ஆசிரியர்கள் வரை ஓய்வு பெறுகின்றனர். 12 ஆண்டுகளில் குறைந்தது 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றிருக்கக் கூடும் என்று கூறப்படும் நிலையில், 3,192 பட்டதாரி ஆசிரியர்கள், 2,768 இடைநிலை ஆசிரியர்கள், 5 கட்டங்களாக 11,420 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக 17,380 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். 12 ஆண்டுகளாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை உயர்த்துவது எந்தக் காலத்திலும் சாத்தியமாகாது.

சமூக மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசு பள்ளிகளால் தான் முடியும். அந்த ஒற்றை இலக்கை அடைவதற்காகவாவது அரசு பள்ளிகள் வலிமையுடன் திகழ வேண்டும். அதற்காக அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

 

 

Tags : Anbumani ,Chennai ,Department of School Education ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டின் முதலீடுகளை...