சென்னை: திருவள்ளூர் இறால் ஆலை அமோனியா கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு பெண் அதிகாலை உயிரிழந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் புனித பீட்டர் பவுல் கடல் உணவுப்பொருள் பதப்படுத்தும் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இது தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை. இங்கு கடல் வாழ் உயினங்களான மீன், இறால் போன்றவை பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தை சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மோகன், அவரது தம்பி ஜெகன் ஆகியோர் நடத்தி வருகிறார்கள்.
இந்த தொழிற்சாலையில் ஒரு ஷிப்ட்டுக்கு 150 முதல் 200 பேர் வரை பணியாற்றுவார்கள். இரண்டு ஷிப்ட்டுகளாக பிரித்து 400 பேர் வரை பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 100க்கும் மேற்பட்டோர் மட்டுமே பணியாற்றி உள்ளனர். அப்போது, திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 60 பெண்கள், 5 ஆண்கள் என 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 35க்கும் மேற்பட்டோர் வெளியே தப்பி ஓடி வந்துள்ளனர்.
வாயு கசிவு ஏற்பட்டு தொழிற்சாலையில் மயங்கி மூக்கு, வாயில் ரத்தம் வந்த நிலையில் இருந்தவர்களை சக தொழிலாளர்கள் சிலர் பாலிதீன் பைகளால் முகத்தை மூடிக்கொண்டு தங்களது தோளில் சுமந்தபடி தூக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றினர். மஞ்சங்காரணை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 42 பெண்களும், 2 ஆண்களும், செங்குன்றம் தனியார் மருத்துவமனையில் 21 பேரும் சிகிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் மேல் சிகிச்சைக்காக 15 பேர் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி நேற்று 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு பெண் அதிகாலை உயிரிழந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழந்தார். தற்போது அமோனியா கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
