சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பான உரிமை மீறல் பிரச்சனையில் பேச அனுமதி அளிக்காத காரணத்தால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, முறைப்படி கடிதம் கொடுத்தும் மேகதாது குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதாக கூறினார்.
சட்டமன்றப் பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, உரிமை மீறல் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து அவையில் பேச அதிமுக தரப்பில் அனுமதி கோரப்பட்டதாகவும், ஆனால் இது குறித்து அவையில் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். முறைப்படி கடிதம் கொடுத்தும், அவையில் மேகதாது அணை விவகாரம் மற்றும் உரிமை மீறல் பிரச்சினை குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்ட காரணத்தால் தாங்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாகவும் கூறினார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என சொல்வது ஏன் என சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
