×

உரிமம் பெறாமல் நிறுவப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம் ரூ.2.10 லட்சம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி தகவல்

 

சென்னை: உரிமம் பெறாமல் நிறுவப்பட்ட 16 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு ரூ.2.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023ன் கீழ் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான விதிகள், அரசாணை எண்.45, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 12.4.2023 நாள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பலகை அமைக்க விரும்புவோர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் https://erp.chennaicorporation.gov.in/portal/login.jsp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒற்றைச் சாளர குழுவால் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து விதிமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டு, உரிய கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் உரிமம் வழங்கப்பட்டு வருகின்றது. உரிமம் பெறப்படாத மற்றும் விதி மீறல் விளம்பர பலகைகளுக்கு ரூ.25,000 அபராதமும், ஒரு முறைக்கு மேல் அமைத்தால் ரூ.1,00,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை மாநகரில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 19.6.2026 மற்றும் 20.6.2026 ஆகிய இரண்டு நாட்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 16 எண்ணிக்கையிலான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு ரூ.2,10,000 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உரிய அனுமதியின்றி நிறுவப்படும் விளம்பரப் பதாகைகள் அகற்றுவதற்கான செலவு நிறுவிய நபரிடமிருந்து வசூலிக்கப்பட்டு, உரிய அபராதம் விதித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் பெறப்பட்ட 967 விளம்பரப் பலகைகள் குறித்த விவரங்கள் சென்னை மாநகராட்சி வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் உரிமம் இல்லாத விளம்பரப் பலகைகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai Municipal Corporation Information ,Chennai ,
× RELATED திருவள்ளூர் இறால் ஆலை அமோனியா கசிவால்...