×

ஒற்றியூர் சிவசக்தியின் பெருமைகள்

பௌர்ணமி நாளில் கடற்கரை ஓரம் கோயில் கொண்டிருக்கும் பெண் தெய்வங்களை வணங்கினோம் என்றால்; நம்முடைய பாவங்கள், பித்ரு தோஷம் நீங்கி, நல்லருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பழமையான கோயில்களில் ஆகர்ஷண ஈர்ப்பு சக்தி மனதிற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும். திருவொற்றியூர் வடிவுடைய அம்மனின் பெருமைகளை எடுத்துக் கூறுவது சொல்லி அடங்காது. இக்கோயில், ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்தோன்றியது.

பல்லவர்கள் காலத்தில் கோயில் எழுப்பப்பட்டு; பின்பு சோழர்கள் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. பொதுவாக கோயில்களில் மூலவருக்கும், உற்சவருக்கும் பெயர் இருக்கும். ஆனால், இங்கு எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுக்கும், அன்னை பார்வதி தேவிக்கும் பற்பல பெயர்கள் உண்டு.

அப்பெயர்கள் அத்தனையும் திருவிளையாடற் புராணத்திலும், கூறப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு ஒற்றீசர், ஆதிபுரீஸ்வரர், தியாகராஜர், படம் பக்க நாதர், தீண்டாதிருமேனி, புற்றிடம் கொண்டவர், எழுத்தறியும் பெருமாள், பாணலிங்கர் ஆகிய பல திருப் பெயர்கள் உண்டு. அன்னைக்கு வடிவுடைய அம்மன், காளிவட்டப்பாறை அம்மன், திரிபுரசுந்தரி என்பனவாம். சிவபுரி, பத்மபுரி, வசந்தபுரி, பிரம்மபுரி, நிரந்தர புரி, “பூலோக சிவலோகம்” என்று பற்பல பெயர்களால் அழைக்கப்பட்டு, சிறப்பு பெற்ற திருத்தலமே “திருவொற்றியூர்’’ ஆகும்.

ஒற்றியூர் பெயர் காரணம்

ஒவ்வொரு யுக முடிவிலும் பிரளயம் தோன்றும். உயிர் இனங்கள் அழிந்து மீண்டும் பிரம்ம தேவனால் புதிய உலகம் படைக்கப்படும். உயிரினங்கள் படைக்கும் கடவுள் பிரம்மா.
சிவபெருமானிடம், நான் யாகம் நடத்த விரும்புகிறேன். அதற்கு, தடை ஏற்படாமல் இருக்க தாங்கள் உதவி புரிய வேண்டும் எனக் கேட்டார். பிரம்மாவின், வேண்டு கோளை ஏற்றுக் கொண்டு, யாகத்தின் நடுவில் அக்னிப் பிழம்பாய் தோன்றினார். தீப்பிழம்பின் ஜோதியின் அழகில் சிவனை கண்ட பிரம்மன், லிங்க வடிவமாக இங்கே வீற்றிருக்க வேண்டும் எனக் கேட்டதன் பெயரில் லிங்கமாக எழுந்தருளினர். யாக குண்டலம் கோயிலாக உருவெடுத்து.

பிரளய காலத்தில், உலகம் முழுவதும் நீர்சூழ்ந்து இருந்ததால், சிவபெருமான் தன் சக்தியின் மூலம் வெப்பமாக மாறி, அந்த பிரளயநீர் முழுவதும் ஆவியாகும் படி ஒற்றி எடுத்தார். ஆதலால், “ஒற்றீசர்’’ என்ற திருநாமம் பெற்றார். ஆதலால் இத்தலம் திருவொற்றியூர் என பெயர் பெற்றது என்று தர்மபுரி ஆதீன தலபுராண வரலாறு விளக்குகிறது.

ஆதிபுரீஸ்வரர்

பிரளய காலத்தில் முதல் முதலில் உயிரினங்களை படைக்கும் பொழுது தோன்றியது “ஆதிபுரீஸ்வரர்’’ என்ற திருநாமம் பெற்று, மகிழ மரத்தடியில் சுயம்பு வடிவில் அருள் பாலிக்கிறார்.

படம் பக்கநாதர்

காட்டில் வாசுகி என்ற பாம்பு திரிந்து கொண்டிருந்தது. உபமன்யு என்ற முனிவர், சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, முனிவரின் திருவடியில் வாசுகி சுருண்டு இருந்தது. கண் விழித்த முனிவர் பாம்பிடம், “உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டார்?’’

“எனக்கு முக்தி கிடைக்க வேண்டும் அதற்கு யாரை நோக்கி நான் தவம் இருக்க வேண்டும் என்று கூறுங்கள்’’ என முனிவரைக் கேட்டது. முனிவர், பாம்புக்கு சிவதீட்சை அளித்து; “கருணையே வடிவான திருவொற்றி யூரில் வீற்றிருக்கும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தால், உன் எண்ணம் ஈடேறும்’’ என்ற ஆலோசனை கூறி வழி அனுப்பினார். சிவபெருமான், வாசுகிக்கு அருள் புரிய எண்ணினார். எனவே, சிவன் புற்றாக எழுந்தருளி, வாசுகியின் வருகைக்காகக் காத்திருந்தார். வாசுகி பாம்பு, சிவனை நோக்கி வந்தது. மனம் கனிந்த சிவபெருமான், அதை தன் உடன் ஒற்றிக் கொண்டார். அதன் பின்பு, வாசுகி புற்றில் நுழைந்ததும் அதற்கு முக்தி அருளச் செய்தார்.

பெட்டிக்குள் பூஜை

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவு கொடுப்பது போல, புற்றில் குடிகொண்டிருக்கும் நாகத்திற்கும் முக்தி கொடுத்ததால், “படம்பக்கநாதர்’’ என்ற திருநாமம் பெற்றார்.
சிவலிங்கம், புற்று மண் வடிவில் இருப்பதினால், அபிஷேகம் செய்ய இயலாது. எனவே லிங்கத்திற்கு கவசமாக ஒரு பெட்டிக்குள் வைத்து மூடி வைத்துவிடுவார். தினமும் பூசை கிடையாது. வருடத்தில், கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று பெட்டிக்குள் இருக்கும் மண் புற்று லிங்கத்தை வெளியே எடுத்து புனுகு, சாம்பிராணி, தைலம் கொண்டு அபிஷேகம் நடக்கும்.

பக்தர்கள் அனைவரும் கார்த்திகை பௌர்ணமியில் மட்டும் படபக்கநாதரின் எழில் கோலத்தைக் கண்டு தரிசிக்கலாம். மற்ற நாட்களில் தரிசனம் காண இயலாது. மூன்று நாள்கள் முடிந்ததும், மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி பெட்டிக்குள் வைத்துவிடுவர். இக்காட்சியை காண்பதற்காகவே மக்கள் அலைதிரளாக திரண்டு வருவர்.

எழுத்தறியும் பெருமான்

சிவபெருமானின் முன்னறிவு மகத்தானது. அதனை சுட்டிக் காட்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்தது. மாந்தாதா என்ற அரசன் ஆட்சி செய்து வந்தார். முதுமை அடைந்து சிவபதவி அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, பாவம் செய்தாவது இறைவன் அருள் பெற வேண்டும் என்பதற்காக, சுற்றியுள்ள சிற்றரசர்கள் குறுநில மன்னர்களிடம் எல்லாம் வரியை வசூல் செய்தார். ஆனால், திருவொற்றியூரில் மட்டும் வரியை வசூலிக்கவில்லை. மன்னர், ஓலை நாயக்கரிடம் எதற்காக திருவொற்றியூரில் மட்டும் வரி எதுவும் வசூலிக்கவில்லை என்று கேட்டார். தாங்கள்தான் அங்கு கூடாது என்று எழுதி உள்ளதால் வசூலிக்கவில்லை என்றார்.

நான் அவ்வாறு கூறவில்லையே என்று சொல்லவும், ஓலை நாயக்கர் ஓலையை எடுத்து நீட்டினார். மன்னர் அதிர்ச்சி அடைந்தார். நான் அவ்வாறு எழுதவில்லையே எனக் கூறி, மாற்றி எழுதினார். ஆனால், அக்கணமே எழுத்துக்கள் மறைந்து “திருவொற்றியூரில் நீங்கலாகுக மற்ற இடங்களில் வரி வசூலிக்கவும்’’ என்ற எழுத்துக்கள் வரி வடிவம் பெற்றது. அதைக் கண்டு மன்னர், அதிசயத்து இறைவன் இங்கே இறை (வரி) வாங்கக்கூடாது என்பதனை இவ்வாறு திருவிளையாடல் ஆடுகிறார்கள் என்பதை அறிந்ததும், மன்னர் வியப்படைந்தார். திருவொற்றியூருக்கு வரி விலக்கப்பட்டது.

சப்த விடங்க தலம்

சப்த விடங்க தலம் என்பது சிவபெருமானின் அழகிய தியாகராஜர் வழிபாட்டுத் தலங்களாகும். “சப்த’’ என்றால் ஏழு. “விடங்கம்’’ என்பதற்கு “உளி’’ என்பது பொருள்படும். திருவாரூரைத் தலைமை இடமாகக் கொண்டு சிவபெருமான் ஏழு இடங்களில் தோன்றினார் என்பதே பொருளாகும்.

முசுகுந்த சக்கரவர்த்தி

சோழ மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தி ஒரு சமயம் இந்திரலோகம் சென்றார் இந்திரன் சிவபெருமானிடம் இருந்து பெற்ற ஏழு லிங்கங்களை கண்டார். இடமிருந்து அந்த ஏழு லிங்கங்களையும் சோழ மன்னர் பெற்று பூவுலகில் ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்தார். அந்த ஏழு தலங்களில் சிவபெருமான் வெவ்வேறு நடனங்களை ஆடியதாக தல புராணங்கள் கூறுகின்றன இதுவே சப்தவிடங்கத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சப்த விடங்கள்

* திருவாரூர் – தியாகராஜர் வீதி விடங்கர் – அஜப நடனம் – அசைந்து ஆடும் நடனம்.

* திருநள்ளாறு – நாகவிடங்கர் – உன்மத்த (பித்து பிடித்தது) நடனம்.

* நாகப்பட்டினம் – நாகைக் காரோணம் – சுந்தர விடங்கர் – பாராவாரத் தரங்க நடனம். (அலை வீசுவது போன்று நடனம்)

* திருக்காராயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம் – சேவல் நடனம்.

5. திருக்குவளை – அவனி விடங்கர் – பிருங்கநடனம். (வண்டு ரீங்காரமிடுவது போல நடனம்)

* திருவாய் மூர் – நீல விடங்கர் – கமல நடனம். (தாமரை மலர் மலர்வது போல நடனம்)

* வேதாரண்யம் – புவனி விடங்கர் – அம்சநடனம்.

“சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில்-பேராளன்
ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி
சப்த விடங்கத் தலம்”

லவனுக்கு காட்சி தந்த சிவன்

ஒரு சமயம் நாரதர் அயோத்தி வருகை புரிந்தார். ராமபிரானின் மகன் லவன் நாரதரை வரவேற்று வணங்கினான். லவனின் நற்குணங்களைப் போற்றி வாழ்த்தினார். பின்னர் திருவொற்றியூரின் பெருமைகளை எடுத்துக்கூறி அங்கு எழுந்தருளியுள்ள, படபக்கநாதரை பிரதோஷ காலத்தில் வணங்கினோம் என்றால் மிகவும் நல்லது. மிகப் பெரும் பயன்களை அடைவாய் என்ற செய்தியை எடுத்துக் கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்தார் லவன். சில காலம் சென்ற பின்பு, அயோத்தியில் இருந்து புறப்பட்டு, திருவொற்றியூருக்கு வரும் வழியில் பெருமழை பொழிந்தது. பயணம் தடைப்பட்டது. ஒற்றியூர் இறைவனைக் காண முடியாமல் தடை ஏற்பட்டதே என வருந்தினார். தரிசனம் கிட்டாமையால் தன்னையே வருத்தி உயிரை விடவும் சித்தமானார். அக்கணம் சிவபெருமான் காளை வாகனத்தில் பார்வதி தேவியோடு காட்சி தந்து வாழ்த்தினார். படபக்கநாதரை அந்த மூன்று நாட்களில் அபிஷேக ஆரத்தியை கண்டு மகிழ்ந்தார்.

கம்பனுக்கு ஒளி காட்டிய பெண் தெய்வம்

கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், முதலாம் குலோத்துங்க சோழ மன்னர். இவரின் அவைப் புலவர்கள் ஒட்டக்கூத்தர், கம்பர் ஆவார். மன்னருக்கு, ராம காவியம் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆதலால், கம்பரையும் ஒட்டக்கூத்தரையும் எழுதுமாறு வலியுறுத்தினார். அப்பொழுது கம்பர், கலைத்திறன் பெற்ற சதுரானை பண்டியரை சந்திக்க திருவொற்றியூர் வந்திருந்தார். வால்மீகி ராமாயணத்தை செவி வழியாக அவரிடத்தில், கற்றதை இரவில் தமிழில் வட்டப்பாறை அம்மன் சன்னிதானத்தில் அமர்ந்து எழுதுவார். அவ்விடம் இருட்டாக இருப்பதினால், அவர் எழுதுவதற்கு உதவியாக வட்டப்பாறை அன்னையை பார்த்து;

“ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே!
நந்தாது எழுதற்கு நல்லிரவில் பிந்தாமல் பந்தம் பிடி”

– என்று பாடியதும், சாதாரண பெண் உருவில், வட்டப்பாறை அம்மன் தோன்றி கையில் தீப்பந்தம் பிடித்து ஒளி தந்து அருள் புரிந்தாள் என்ற சிறப்பு செய்தி உண்டு.ஏக பாதர் சிவனின் 64 திருமேனிகளில் “ஏகபாதர்’’ திருமேனியும் ஒன்றாகும். இவ்வுருவம் தத்துவார்த்தமானது. “ஏக’’ என்றால் ஒன்று. “பாதம்’’ என்றால் கால். அதாவது ஒரே பாதத்தில் நிற்கும் சிவன் என்று பொருள் (ஒரே கல்லில் செதுக்கிய சிவன்) ஒரே கல்லில் மிக உயரமான நின்று உடலில் இடுப்பு பகுதிக்கு ஒருபுறம் பிரம்மாவும், மறுபுறம் விஷ்ணுவும் சிவனுடன் இணைந்து இருப்பர். உலகின் ஆதாரம் ஒரே பரம்பொருள் என்று குறிக்கப்படும்.

ஏகபாதர் எங்கே இருப்பார்?

சிவாலயங்களில் எல்லா கோயில்களிலும் இருக்கமாட்டார். சில ஆலயங்களில் மட்டும் இருப்பார். சில கோபுரங்களில் இவரின் உருவங்கள் பதிக்கப்பட்டு இருக்கலாம்.
திருவொற்றியூர் செல்ல வேண்டும் என மனதால் நிலைத்தாலே போதும், எமபயம் நீங்கும். தலத்தில் எல்லையை மிதித்தாலே துன்பம் நீங்கும். இத்தலத்தில் இறந்தால் பிரம்மனுக்கும் எட்டாத சிவப்பதவி கிடைக்கும் என்று செவிவழிச் செய்தியும் உண்டு. மேலும், அன்னதானம் செய்தால் இந்திரபதம் கிட்டும் என்று தலபுராணம் விவரிக்கிறது. கோயில் அமைத்தவர், பல்லவர் மன்னர்கள் மற்றும் சோழமன்னர்கள்.

பரிகாரம்

ஜாதக கட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தால், அர்ச்சனை செய்து ஏகபாதரை தரிசனம் செய்தால் கவலைகள் நீங்கும்.

நேர்த்திக்கடன்

கோயிலில் உள்ள அம்மனுக்கு சிவப்பு புடவையை சாற்றி பலாப்பழத்தை நிவேதனமாக இறைவனுக்கு படைக்கப்பட்டால், நினைத்த காரியம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

தைபூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை பௌர்ணமி திருவிழா ஆகியவை சிறப்பாக நடைபெறும்.
மூலவர்: படம் பக்கமாகநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடம்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர்.

அம்மனுக்குரிய பெயர்கள்: வடிவுடையம்மன், வட்டப்பாறை அம்மன், திரிபுரசுந்தரி.

தல விருட்சம்: மகிழம், அத்தி.
தீர்த்தம்: பிரம்மதீர்த்தம், நந்திதீர்த்தம்.
ஆகமம்: காரணம் காமீகம்.
புராணம் பெயர்: திருவொற்றியூர்.

நடை திறக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

எப்படி செல்வது: சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் இருந்து 25 கி.மீ., தொலைவில் திருவொற்றியூர் உள்ளது.

பொன்முகரியன்

Tags : Otyyur Civakthi ,Purnama ,
× RELATED நம் எண்ணங்களும், சிந்தனைகளும் என்ன செய்கிறது?