×

பயிற்சியும், வைராக்கியமும்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 121 (பகவத்கீதை உரை)

அஸம்ஸயம் மஹாபாஹோ மனோ துர்நிக்ரஹம் சலம்
அப்யா ஸேன து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே (6:35)

‘‘‘உண்மைதான், அர்ஜுனா. மனம் கட்டுப்படாதது, அலைபாயக்கூடியதுதான். ஆனால், வலிமையான தோள்களைக் கொண்டவனே, குந்தியின் மைந்தனே, திட சித்தத்துடன் – வைராக்கியத்துடன் – நீ பயிற்சியை மேற்கொண்டாயானால், மனதை உன்னால் வசப்படுத்த முடியும்.’’மானுட இயல்பை கிருஷ்ணன் புறந்தள்ள வில்லை. ஆனால், அந்த இயல்புப்படியே வாழ்வதில் அர்த்தமே இல்லை என்றுதான் வலியுறுத்துகிறார்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒருவன் சரியாகப் பேசுகிறான் என்றால், அது எப்படி அவனுக்கு சாத்தியமானது? எதிராளி இன்ன மாதிரி கேட்பார், நாம் இன்ன மாதிரி பதில் சொல்ல வேண்டுமென்று ஒத்திகையா பார்த்துக் கொள்ள முடியும்? எதிர்பாராத தருணங்களில், எதிர்பாராத கேள்விகளுக்கு ஒருவனால் மிகச் சரியான பதிலையோ, விளக்கத்தையோ சொல்லமுடிகிறதென்றால், அவ்வாறு அவன் பேசப் பயிற்சி எடுத்துக் கொண்டதுதான் காரணம். மேடைப் பேச்சாளர்கள் தம் வீட்டில் ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம்; ஆனால், வீதிப் பேச்சில் அது கை கொடுக்காது. மாறாக சமயோசித சிந்தனைதான் உதவிக்கு வரும். இதுபோன்ற அனுபவங்களால் – பயிற்சிகளால் – இது சாத்தியமாகி இருக்கிறது என்றே சொல்லலாம்.

‘‘அர்ஜுனா, நீ உன்னுடைய அனுபவத்திலிருந்து பேசுகிறாய். உன் மனம் அலைபாய்வதை உன்னால் உணர முடிகிறது. ஆனால் அதை அடக்க நீ எத்தகைய முயற்சியை எடுத்திருக்கிறாய்? திட சிந்தனையுடன், உறுதியான வைராக்கியத்துடன் நீ முயற்சி செய்திருக்கிறாயா? இப்படி முயன்றிருந்தாயானால் உன்னால் மனதைக் கட்டுப்படுத்துவது எளிதாகி இருக்குமே!” என்று கேட்கிறார் கிருஷ்ணன்.தன் கருத்தை கிருஷ்ணன் ஏற்றுக் கொண்டதில் அர்ஜுனனுக்கு மகிழ்ச்சி. மனம் அலைபாயக் கூடியது என்ற யதார்த்தத்தை அவர் ஒப்புக் கொள்கிறார். ஆனால் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், அதற்கான உத்தியையும் தெரிவிக்கிறார்.

ஓட்டப் பந்தயத்தில் உடன் போட்டியிடு பவர்களைப் பார்த்து மயங்குவதோ, ஓட வேண்டிய தூரத்தை எண்ணி மலைப்பதோ காரியத்துக்கு ஆகாது. பந்தயக் களத்துக்கு வர எத்தனைக் கடினமாகப் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிறது! இத்தனை முயற்சிகளுக்கும் உந்து சக்தி எது? இலக்கை அடைந்துவிட வேண்டும் என்ற வேட்கைதானே? போட்டிகளால், ஓட்ட தூரத்தால், மனம் வலிவிழக்குமானால் எத்தனை முயற்சி எடுத்திருந்தாலும் அதெல்லாம் வீண்தானே? அதே சமயம், பயிற்சியும், வைராக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. எந்தக் குறிக்கோளை அடைய பயிற்சி மேற்கொள்கிறோமோ, அந்தப் பயிற்சி தொய்வின்றி, நீட்டிக்கப்பட, வைராக்கியம் அவசியம்.

இன்றைய சூழலில் நாம் உடலாகத் தோற்றம் கொண்டிருக்கிறோம்; ஆனால் மனதால் வாழ்கிறோம். நம்முடைய பிறவி இயல்பு, வயதாக ஆக, குடும்பம் மற்றும் வெளி வட்டார சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கிறது அல்லது வளைய மறுக்கிறது. இதற்கு மனம்தான் காரணம். சூழ்நிலைக்கேற்ப எண்ணங்கள், செய்கைகள் எல்லாம் மாறுகின்றன. மனிதன் மிருகங்களிடையே வளர்ந்தானானால் எத்தகைய வாழ்க்கையை மேற்கொள்வான் என்பதை, ‘டார்ஜான்’ முதல் ‘ஜங்கிள் புக்’ வரை பல திரைப்படங்கள் நமக்கு விளக்கின. இந்தப் படங்கள் வெறும் கதையல்ல, ஏற்கெனவே காட்டில், மிருகங்கள் மத்தியில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை. நம் நாட்டிலேயே ‘ஒநாய்கள் வளர்த்த’ சில பிள்ளைகளைக் காட்டிலிருந்து மீட்டிருக்கிறார்கள். கிராம எல்லையில் நடமாடும் ஓநாய்கள், அங்கிருந்து சிசுக்களைத் தூக்கிச் சென்று வளர்த்த சில சம்பவங்கள், உலகில் பல நாடுகளில் நிகழ்ந்துள்ளன.

நம் நாட்டில் 1920ம் ஆண்டு வாக்கில் வங்காளத்திலிருந்து இரு பெண் குழந்தைகளைத் தூக்கிச் சென்றன ஓநாய்கள். பல வருடங்களுக்குப் பிறகு தற்செயலாகக் காட்டிற்குள் சென்ற சில சுற்றுலாவாசிகள் பதினாறு மற்றும் பதின்மூன்று வயதுடைய அந்தப் பெண்களைக் கண்டார்கள். அந்தக் காட்டில் பல மிருகங்களை அடையாளம் கண்டு கொண்ட சுற்றுலாவாசிகளுக்கு, இந்தப் பெண்களை மனிதர்கள் என்று தெரிந்து கொள்ள வெகு நேரமாகவில்லை.

ஆனால் நெருங்கி அவர்களுடன் பேச முற்பட்டபோது அவர்கள் இவர்களைப் பார்த்து மிரண்டார்கள். ஆமாம், மிருகங்களுடனேயே வாழ்ந்த அவர்கள் மனிதர்களைப் பார்த்ததேயில்லை. சுற்றுலாவாசிகள் அவர்களுடன் பேச முற்பட்டபோது, அவர்களுக்கு பதில் பேசத் தெரியவில்லை என்பதை அறிந்தார்கள். அவர்கள் மனிதர்களுடன் பேசிப் பழகியிருந்தால்தானே அது முடியும்? அதனால் மிருக மொழி தவிர மனித மொழி அவர்களுக்குத் தெரியாத விஷயமாக இருந்தது. அதோடு அந்தப் பெண்கள் இரு கால்களில் நிற்பதும், நடப்பதும் அல்லாமல், கைகளையும் கால்களாக பாவித்து நான்கு கால்களால் நடப்பதையும், வேகமாக ஓடுவதையும் கவனித்தார்கள்.

அவர்கள் ஓநாய்களால் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை காட்டிலாகா அதிகாரிகள் தந்த தகவல் அடிப்படையில் தெரிந்து கொண்டார்கள். ஒருமாதிரியாக அந்தப் பெண்களை நகரத்துக்கு அழைத்து வந்து, அவர்களை ‘ஊளை‘ மொழியிலிருந்து சராசரி மனிதப்பேச்சுக்கு மாற்ற முயற்சி செய்தார்கள். அதேபோல இரு கால்களால் நிற்க வைக்கவும் முயன்றார்கள். ஆனால் அந்தப் பெண்களால் அவர்கள் எதிர்பார்த்தது போல பேசவும் இயலவில்லை; நடக்கவும் முடியவில்லை. குழந்தைப் பருவத்திலிருந்து அவர்கள் பயின்றது மிருகமொழியைத்தான்; நடை பழகியது மிருகங்களைப் போலதான். ஆகவே, வேறு வழியின்றி அவர்களை காட்டிலேயே கொண்டு விட்டுவிட, அவர்கள் உற்சாகமாக, நான்கு கால் பாய்ச்சலில். உள்ளே ஓடியதைக் கண்டு வருத்தத்துடன் அதிசயித்தார்கள், சுற்றுலாவாசிகள்.

அந்தப் பெண்கள் ஒநாய்களுடனேயே வசித்திருக்கிறார்கள். இலக்கு என்று எதுவும் இல்லையென்றாலும், ஓநாய்களைப் போலவே ஊளையிடவும், நான்கு கால்களால் ஓடவும், இறைச்சி உண்ணவும் பயிற்சி பெற்றுவிட்டார்கள். ஆகவே அவர்களால் அந்த மிருக வாழ்க்கையிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை. ஆக, ஒரு விஷயத்தில் தொடர்ந்து மேற்கொள்ளும் பயிற்சியால் நம் மனம் முற்றிலும் மாறிவிடும். அது நினலயற்றது என்று மட்டுமே எண்ணிக் கொண்டு அதை அமைதிப் படுத்தவும், நல் சிந்தனையால் தடம் மாற்றவும் முயற்சிக்காமல் இருப்போமேயானால், நம்மிடம் நாமே ஏமாந்து போக வேண்டியது தவிர்க்க முடியாதது! பயிற்சியும், வைராக்கியமும் புலன்களால் ஈர்க்கப்படாதவையாக இருக்க வேண்டும். புலனுக்கு முக்கியத்துவம் கொடுப்போமேயானால், பயிற்சியில் ஈடுபாடோ, வைராக்கியத்தில் உறுதியோ இல்லாமல் போய்விடும்.

நீச்சல் பழகுகிறான் ஒருவன். ஆரம்ப கட்டத்தில் அவனுக்குப் பயிற்சியாளரின் உதவி தேவைப்படுகிறது. நாலைந்து நாட்களுக்குள்ளேயே அவனால் குறிப்பிட்ட சிறிய நீச்சல் குளத்திற்குள் நீந்த முடிகிறது. அடுத்தடுத்த பயிற்சிகளில் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளவும் அவனுக்கு நம்பிக்கை வருகிறது. அதேபோல போட்டியில் வெற்றி என்ற வைராக்கியம் உறுதிப் படுகிறது. இவ்வாறு பயிற்சியும், வைராக்கியமும் இணையும்போது அவனுக்கு வெற்றி சித்திக்கிறது.

அஸம்யதாத்மனா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி
வச்யாய்ஹ்மனா து யததா சக்யோ வாப்துமுபாயத (6:36)

‘‘மனதை அடக்காதவனால் யோகத்தை அடைய முடியாது என்பது என் கருத்து. ஆனால், அவ்வாறு பயிற்சியால், அந்த முயற்சியால் ஒருவனால் மனதை அடக்க முடிந்தது என்றால் அவனால் யோகம் அடைய முடியும்.’’அர்ஜுனனின் இப்போதைய மனப் போக்கிற்கு ஏற்ப பேசுகிறார் கிருஷ்ணன். ‘இது என் கருத்து‘ என்றுதான் சொல்கிறாரே தவிர, இதுதான் சட்டம், விதி என்று சொல்லி அர்ஜுனனை மறைமுகமாகக் கட்டாயப்படுத்தவில்லை. அவனைப் போலவே அவரும் சாதாரணராக இந்த வார்த்தைகளில் பயணிக்கிறார். இது அர்ஜுனனை, விலகலிலிருந்து விடுபடச் செய்து, அவருடைய கருத்தை முழு மனதுடன் ஊன்றிக் கவனிக்கவைக்கிறது.

ஆனால், அர்ஜுனனுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கக் கூடும். பால்ய வயதிலிருந்தே இந்த கிருஷ்ணனுடன் அவன் பழகி வந்திருக்கிறான். ஆனால் அவர் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை‘யாகத்தான் இருந்திருக்கிறாரே தவிர, தனக்கு இதுவரை அவர் அறிவுறுத்திய எந்தப் பயிற்சியையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லையே! அப்படியிருக்க அனுபவப்பட்டவர் போல எப்படி இவ்வாறு அறிவுறுத்தத் துணிகிறார் அவர்?

அர்ஜுனனுக்கு இப்போதைக்கு உண்டான இக்கட்டு எதையுமே கிருஷ்ணன் சந்தித்ததில்லை. குழந்தைப் பருவத்திலேயே அரக்கர்களை வதைத்தபோதும் சரி, வெண்ணெயைத் திருடி ஆயர்குலப் பெண்களின் ‘அன்புக்’ கண்டனத்துக்கு ஆளானபோதும் சரி, கோபிகையருடன் ஆனந்த நடனம் புரிந்தபோதும் சரி, எப்போதுமே அவர் நிரந்தர மகிழ்ச்சியுடையவராகத்தான் இருந்தாரே தவிர, எந்தவகை மனக் குழப்பத்துக்கும் ஆளானதாகவே காட்சியளித்ததில்லை. அவர் அப்போதே பரமாத்மாவாகத்தான் விளங்கினார் என்று ஒரு காரணத்தைச் சொல்லிவிடலாம்; ஆனால், அவர் சாதாரண இடையனாகத்தான் வாழ்ந்தார்.

எந்தச் சூழ்நிலையிலும் மாறாத புன்னகையின் பின்னால் முற்றிலும் அமைதியடைந்த மனசு இருந்தது, இருக்கிறது. அதனாலேயே அவரால் மன அடக்கம் பற்றி அறிவுறுத்த முடிகிறது. இந்த மன அடக்கத்தை அவர் எப்போது பயின்றார் என்பது அர்ஜுனனின் சந்தேகமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் தன் ஒவ்வொரு செயலையும், அவர் தீர்க்கமாக நிறைவேற்றினார். அது நூற்றுக்கு நூறு முழுமையாகும்படி செயல்பட்டார். அதாவது ஒவ்வொரு செயலிலும் அவர் எந்த பிற சிந்தனைக் கலப்புமில்லாமல், எண்ண அலைக்கழிப்பு இல்லாமல், பரிசுத்தமாக ஈடுபட்டார். இதையெல்லாம் அந்தந்த சந்தர்ப்பங்களில் உடன் இருந்திருக்கக் கூடிய அர்ஜுனனிடம் அவரால் விளக்குவதற்கான முகாந்திரம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது இருக்கிறது. ஒரு செயலின்போது மனதை திசை திருப்பாத பயிற்சியை அவர் அடுத்தடுத்த பல சந்தர்ப்பங்களில் மேற்கொண்டு வந்திருக்கிறார் என்றுதான் கருத வேண்டும்.

மனிதரிலும் கிருஷ்ணரைப் போல(!) திடசித்தர்களை நம் காலத்திலேயே நாம் பார்க்கிறோம். அவர்கள் நம்மோடுதான் வாழ்கிறார்கள், நம்மோடு பேசுகிறார்கள், சகஜமாகப் பழகுகிறர்கள்; ஆனால் நம்மை விட்டு விலகியிருக்கிறார்கள். நம்முடனான நடவடிக்கைகளில் அவர்கள் தம் மனதை முன்னிருத்துவதில்லை. உணர்வுபூர்வம் இல்லை. அதேசமயம் அவர்களுடனான நம் பழக்கத்தில் அந்த வித்தியாசத்தை நம்மால் காண முடிவதில்லை. ரமண மகரிஷி, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய அத்தகைய சில உதாரண புருஷர்களை நாம் அறிவோம். அவர்கள் வெளிப்படையானவர்கள்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ‘‘என் குழந்தைகளே, நான் அக்காலங்களில் தியானத்தில் அமர்வதற்கு முன்னால், என் மனதிலுள்ள ஆசைகள், கெட்ட எண்ணங்கள் முதலான சகல கல்மஷங்களையும் அலம்பி சுத்தப்படுத்தி விட்டதாக பாவனை செய்து கொண்டு அதன் பிறகே பகவானை அவ்விடத்தில் எழுந்தருளப் பண்ணுவேன். நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்,” என்று தன் சாதனை நாட்களைப் பற்றித் தன் சீடர்களுக்குக் கூறுவார். இணக்கமான, அனுகூலமான சூழ்நிலையில் மனதைக் கட்டுப்படுத்துவது ஓரளவுக்கு சுலபமாக இருக்கும்; ஆனால் பிரதிகூலமான சூழலில் அது எளிதல்லதான். அதனால்தான் அந்த காலத்தில் முனிவர்களும், தவசிகளும் காட்டுக்குள் சென்று தியானம் பயின்றார்கள்.

அந்தச் சூழ்நிலை அவர்களுடைய மன அமைதிக்கு ஏற்புடையதாக இருந்தது. ஏற்கெனவே கிருஷ்ணன் அறிவுறுத்தியதுபோல தூய்மையான இடத்தையும், இருக்கையையும் அமைத்துக் கொண்டு தியானம் பழகலாம். இதனால் மனசுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கலாம் – அலைபாயாது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இடையூறுகளையும் புறக்கணிக்கும் ஆற்றல் வரும். ஒரு கட்டத்தில் மனசு மேகங்களற்ற தூய விண்வெளியாகி விடும். அந்தக் கட்டம் எப்போது கிட்டும்? அது அவரவர் பயிற்சியையும், வைராக்கியத்தையும் பொறுத்தது!

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

Tags : Arjuna ,
× RELATED கனவை நிஜமாக்கும் நெடுங்குடி கைலாசநாதர்!!