சென்னை: போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் 8 அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக 21,527 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறித்தும், அதன்மூலம் நாளொன்றுக்கு 2.05 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர் என்றும், அதில் 64 விழுக்காடு பயணிகளுக்கு கட்டணமின்றி சேவை வழங்கப்படுகிறது என்றும், தமிழ்நாட்டில் 1,000 நபர்களுக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் 98.40 விழுக்காடு என்கின்ற அளவில் அரசு பேருந்து சேவையானது வழங்கப்பட்டு வருகிறது என்றும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இத்துறையின் கீழ் இயங்கும் 8 போக்குவரத்துக் கழகங்கள், சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழ்நாடு பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு இயக்குநகரத்தின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் விவரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு செயல்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
பயணிகளின் நலனுக்காக புதிய மென்பொருள் (Software) உருவாக்கப்பட்டு பேருந்துகளின் புறப்பாடு, வருகை, பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றை GPS கருவி மூலம் இணைத்து 24×7 மணி நேரமும் செயல்படும் தகவல் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை முக்கிய பேருந்து நிலையங்களில் அமைத்து, அதனை 8 போக்குவரத்து கழகங்களின் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடனும், சென்னையில் அமையப்பெறும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துடனும் இணைத்து கண்காணிக்கும் திட்டம் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது
போக்குவரத்துத் துறையின் தொலைநோக்குத் திட்டங்களான மகளிர் மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பயணம் செய்வது தொடர்பான செயல் திட்டம் குறித்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்துகளை பெருமளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போக்குவரத்துக் கழகங்களால் புதிதாக கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் என்றும், பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயணிக்க ஸ்மார்ட் கார்டு (Smart Card) முறையை அமுல்படுத்த வேண்டும் எனவும், பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் விதமாக Bus Rapid Transit System திட்ட செயலாக்கம் குறித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள்.
