×

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் கூட்டம் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: ஆளுநர் அர்லேகர் உரையாற்றுகிறார்

 

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், தமிழக ஆளுநர் அர்லேகர் உரையாற்றுகிறார். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

என்றாலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்காமல் மைனாரிட்டியாக இருந்ததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. ஒரு வழியாக, காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (2), இந்திய கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால், தவெக ஆட்சி நடத்த பெரும்பான்மைக்கு தேவையான 120 இடங்கள் கிடைத்தன.

அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் (மே) 10ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தமிழகத்தின் 12வது முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அடுத்த நாள் (மே 11) தமிழக சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் மு.வெ.கருப்பையா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தொடர்ந்து, மே 13ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. 5 பேர் நடுநிலை வகித்தனர். திமுக வெளிநடப்பு செய்தது. அதன்பின்னர், மே 21ம் தேதி நடைபெற்ற 2வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேரும், 22ம் தேதி நடைபெற்ற 3வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

17-வது சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் 146 பேர் புதியவர்கள். முதல் முறையாக அவைக்கு வருபவர்கள். எனவே, சட்டசபை மரபுகள் என்ன, அவையில் எதை பேசவேண்டும், எதை பேசக்கூடாது என்பதை எம்எல்ஏக்கள் தெரிந்துகொள்வதற்காக 2 நாள் புத்தாக்க பயிற்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (வியாழன்) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றுகிறார். இதற்காக, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இருந்து காலை 9.30 மணியளவில் ஆளுநர் அர்லேகர் காரில் புறப்படுகிறார். காலை 9.50 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் அவரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்பார்.

அதன்பின்னர், ஆளுநர் அர்லேகர் அவைக்கு அழைத்து வரப்படுவார். காலை 10 மணிக்கு சபாநாயகர் இருக்கைக்கு வரும் அவர், தனது உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார். இந்த உரை சுமார் 1 மணி நேரம் இடம்பெறும் என்று தெரிகிறது. அதன்பின்னர், ஆளுநர் அர்லேகரின் உரையை, வலதுபுற இருக்கையில் அமர்ந்திருக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார். இடதுபுற இருக்கையில் கவர்னரின் முதன்மை செயலாளர் ஷஜன் சிங் சவான் அமர்ந்திருப்பார்.

கூட்டம் முடிந்ததும் அனைத்து உறுப்பினர்களிடமும் விடைபெற்று ஆளுநர் அர்லேகர் புறப்பட்டு செல்வார். அதன்பின்னர், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். ஆளுநர் உரையுடன் நாளை தொடங்கும் கூட்டம் 2 நாள் அல்லது 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

Tags : Tamil Nadu Legislature ,Takega ,Chief Minister ,Vijay ,Governor Arlekar ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Taweka ,Tamil Nadu ,
× RELATED போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள்...