×

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

 

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இதில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். நிதி ஆயோக் கவுன்சிலின் 11வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டம் மதியம் 1 மணி வரையில் ஒரு கட்டமாகவும், பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை என இரு கட்டங்களாக நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

இதில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் என முக்கிய ஒன்றிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டார். மேலும், பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், முழுநேர உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் நடத்தப்பட்ட முக்கிய ஆலோசனையில், ‘‘மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல், குறிப்பாக தேசிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. முக்கியமாக புதிய இந்தியா என்ற திட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த நிதி ஆயோக் கூட்டமானது நடைபெற்றது. குறிப்பாக அடுத்த 15 ஆண்டுகளுக்கான நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டம், பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாடு முழுவதும் சிறு குறு தொழிலை எப்படி ஊக்கப்படுத்துவது,

பணவீக்கத்தை எவ்வாறு சரி செய்து ஜி.டி.பியை அதிகப்படுத்துவது என்பது உட்பட பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எப்படி நடத்துவது, நாரி சக்தி குறித்தும் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர்களுடன் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதேபோன்று சில அரசியல் ஆலோசனைகள் மற்றும் முடிவுகளையும் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்துள்ளார்.

குறிப்பாக மாநில தொலைநோக்கு பார்வைகளை தேசிய வளர்ச்சி இலக்குகளுடன் சீரமைப்பது, தொழில்சார் உள்கட்டமைப்பு மேம்பாடு, மனித மூலதனம் மற்றும் திறன்கள், அடித்தள கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு தயாரான திறன் மேம்பாடு, பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, உற்பத்தித்திறன் மிக்க வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு, நல்வாழ்வு, விரிவான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சமத்துவம் மற்றும் கண்ணியம், அனைத்து சமூக-பொருளாதாரப் பிரிவினருக்கும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்தல், தொழில்சார் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் தலைமை செயல் அதிகாரி நிதி சிப்பர் கூடுதல் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Niti Aayog ,Delhi ,PM Modi ,New Delhi ,Modi ,Niti Aayog Council Delhi Presidential House ,
× RELATED மீனாட்சி நடராஜன் வேட்பு மனு...