புவனேஷ்வர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த இரண்டு ரயில்கள் வந்ததால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக ஒரு பெரும் ரயில் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது. ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரயில்களிலுமே பயணிகள் இல்லை என்றும், பராமரிப்புப் பணிகளுக்காக காலி ரயில் பெட்டிகள் நகர்த்தப்பட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
குறைந்த வேகத்தில் நகர்த்தப்பட்ட அந்த காலி ரயில் பெட்டிகள், அதே இடத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு காலி ரயில் பெட்டிகளுக்கு மிக அருகில் சென்றன. ஆனால் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஜார்படா என்ற மேம்பால பகுதியில் இந்த ஆபத்தான சூழல் உருவானதே அப்பகுதி மக்கள் பீதியடைய முக்கிய காரணம். இந்த சம்பவம் குறிப்பிட்ட 2 ரயில்களில் வந்த பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்டத் தகவல்களின்படி, புவனேஸ்வரிலிருந்து மன்சேஸ்வரை (Mancheswar) நோக்கி ஒரு ரயிலும், அதேவேளையில், மற்றொரு ரயில் அதற்கு நேர்மாறான திசையிலும் ஒரே தண்டவாளத்தில் மோதி கொள்ளும் அபாயகரமான பாதையில் வந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதனால் அங்கிருந்தவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது, எனினும் இரண்டு ரயில்களும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன. இதற்கு சம்பவ இடத்தில் இருந்த ரயில்வே ஊழியர்களின் விரைவான செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு காரணமாக கூறப்பட்டுள்ளது, இதன் காரணமாக ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்கள் மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டு வந்த போது, ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வருவதை 2 ரயில்களின் லோகோ பைலட்டுகளும், ரயில்வே ஊழியர்களும் சரியான நேரத்தில் கவனித்தனர் இதனால் ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, மோதல் தடுக்கப்பட்டது
இந்த குளறுபடிக்கு சிக்னல், தகவல் தொடர்பு அல்லது செயல்பாட்டு ரீதியான குறைபாடுகள் ஏதேனும் உள்ளனவா என்பதைக் கண்டறியவும், இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எப்படி வந்தன என்பதை ஆராயவும் ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
