×

‘முல்லைப்பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு புதிய அணையே’ கேரள அமைச்சரின் பேச்சுக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு

 

கூடலூர்: ‘முல்லைபெரியாறு அணை பிரச்னைக்கு புதிய அணையே தீர்வு’ என கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்ததற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் தமிழக எல்லையோரம் அமைந்துள்ள 152 அடி உயர முல்லைப்பெரியாறு அணையை 999 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக அரசு பராமரித்து நிர்வகித்து வருகிறது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

இந்நிலையில், அணையின் பலம், நீர்த்தேக்க அளவு மற்றும் அணையின் கீழ் வாழும் மக்களின் பாதுகாப்பு குறித்து கேரள அரசும், சில அமைப்புகளும் தொடர்ந்து பீதியை கிளப்பி வருகின்றன. இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பேபி அணையை பலப்படுத்தி அணையில் 152 அடி வரை தமிழகம் தண்ணீர் தேக்கலாம் என உத்தரவிட்டது. இருப்பினும் அணை நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கேரள அரசும், அங்குள்ள சில அமைப்புகளும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அணை பராமரிப்பு பணிகளுக்கும் தொடர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநிலம், கோட்டயத்தில் நேற்று நிருபர்களை சந்தித்த அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் மான்ஸ் ஜோசப் கூறுகையில், ‘முல்லைப்பெரியாறு அணையின் கீழ் பகுதிகளில் வாழும் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய அணை அவசியம். தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. ஆனால், கேரள மக்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய புதிய அணை தேவை என்பது மாநிலத்தின் நிலைப்பாடாகும். ‘‘தமிழகத்துக்கு தண்ணீர், கேரளத்திற்கு பாதுகாப்பு’’ என்ற கொள்கையில் கேரள அரசு உறுதியாக இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த கேரளா அரசு தயாராக உள்ளது’ என்றார்.

கேரள முதல்வர் வி.டி.சதீசனின் முல்லைப்பெரியாறு அணை தொடர்பான கடந்த கால பேச்சுகளும், நிலைப்பாடும் தமிழக நலனுக்கு எதிராக வெளிப்பட்டிருந்த நிலையில், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சரின் பேட்டியும் இருமாநிலங்கள் இடையே மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,Kerala ,minister ,Mullaperiyar ,Gudalur ,State Water Resources Minister ,Mullaperiyar dam ,Idukki district ,
× RELATED குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு