சென்னை: கடந்த மாதம் முதல்வராக பதவியேற்ற போது என் ஆட்சியில் பவர் சென்டரே கிடையாது, நான் மட்டும் தான் ஒரே பவர் சென்டர் என்று விண்ணதிர, நரம்பு புடைக்க முழங்கினீர்கள். ஆனால் உங்களை சுற்றி 4 பேர் பவர் சென்டராக தலைமை செயலகத்தை ஆக்கிரமித்து ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்பட ஒட்டுமொத்த தலைமைச் செயலக நிர்வாகத்தை கட்டுக்குள் வைத்துள்ளார்களே என்று அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி.உதயகுமார், முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணுரெட்டி, ஜெகதீஷ் பழனிச்சாமி, ராம்குமார்.. இந்த நான்கு பேரும் யார் மொழிப்போர் தியாகிகளா, தமிழ் இனத்திற்காக சிறை சென்றவர்களா! இந்த மண்ணுக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வரலாற்றில் இடம்பெற்றவர்களா? இவர்களுக்கும் தலைமை செயலகத்திற்கும் என்ன தொடர்பு? இவர்கள் தமிழ் இனத்திற்காக போராடிய தியாகச் செம்மல்களா..? இவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையான அந்தஸ்து கொடுத்து கோட்டையிலே அமர வைத்திருப்பது ஒட்டுமொத்த நிர்வாகத்தில் களகத்தை ஏற்படுத்தி இருப்பது முதல்வர் விஜய் தம்பி உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
நீங்கள் முதல்வராக இருக்கிறீர்கள், எனவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உங்களுக்கு முதல் மரியாதையை செலுத்த வேண்டியது மரபு. ஆனால் உங்கள் நண்பர்களுக்கும், நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களுக்கும், அவருக்கு தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கு எல்லாம் மரியாதை செலுத்துவதும் அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய துர்பாக்கிய சூழல் உருவாகி இருப்பது அரசு அதிகாரிகளுக்கான மாண்புகளை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
மொத்தத்தில் எப்போது நட்பு வேறு, ஆட்சி நிர்வாகம் வேறு என்பதை தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் தம்பி புரிந்து கொள்வார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது என்று ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார்.
