×

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல் தவெக எம்எல்ஏ மீது சட்ட நடவடிக்கை: எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மிக கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

இக்கொடூரம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என ஆளும் கட்சியினர் மிரட்டியுள்ளதோடு, அப்பகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரே நேரடியாக காவல்துறையில் புகார் அளிக்கக் கூடாது என தன்னை மிரட்டியதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியிருப்பது தொடர்பான செய்திகள், ஆளும் தரப்பின் அதிகார மிரட்டலையும், அராஜகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இதனை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இக்குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காப்பாற்ற முயலும் எவ்வித சதியையும் அனுமதிக்க முடியாது. வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள் மீதும், அவர்களுக்கு துணையாக நின்று பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியதாக கூறப்படும் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீதும் சட்டரீதியான மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவதோடு, உரிய நிவாரணமும், அரசு வேலையும் அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.

Tags : MLA ,STBI ,Chennai ,STBI party ,Ravichandran ,Sri Vaikuntam ,Tamil Nadu Victory Party… ,
× RELATED புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம்...