டவுன்டன்: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 12ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதற்கு பயிற்சியாக இந்திய மகளிர் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் இங்கிலாந்தும் வென்ற நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 56, தீப்தி சர்மா 32, ஜெமீமா 29 ரன்கள் அடித்தனர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஆலிஸ் கேப்ஸி 82 ரன் (43 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), ஹீதர் நைட் 70 ரன் (42 பந்து, 10 பவுண்டரி) விளாசினர். இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
