சென்னை: முதல்வர் விஜய் நாளை மறுநாள் திருச்சி செல்கிறார். அவர் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைவர் விஜய், முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், பெரம்பூரை தக்கவைத்து கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
விரைவில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்திப்பதற்காக முதல்வர் விஜய், வரும் 1ம் தேதி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். இதற்காக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள கல்லூரி மையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
