புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் வரும் ஜூன் 10ல் நடைபெறவுள்ள நிலையில், ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி நாட்டின் பிரதமராக முதன்முறையாக பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து, அவரது தலைமையிலான ஒன்றிய அரசு 12 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, கடந்த 26ம் தேதி சாதனை தினமாக ஆளுங்கட்சி கொண்டாடியது.
இந்நிலையில், பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி பதவி ஏற்ற தினத்தை நினைவுகூரும் வகையில், வரும் ஜூன் 10ம் தேதி அன்று டெல்லியில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்து நடத்தும் இந்த முக்கிய நிகழ்வில், ஒன்றிய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் எனப் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாக்களில் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நலத்திட்டங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி சாதனைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளன.
மேலும், வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்கு வியூகம் இதில் முன்வைக்கப்பட உள்ளது. இதனுடன் இணைந்து அனைத்து மாநிலங்களிலும் கருத்தரங்குகள், செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டம் முடிந்த பின்னர், ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. சுமார் 12 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
வரும் ஜூன் மாதம் மத்தியில் ஒன்றிய அமைச்சரவை மாற்றி அமைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு ஒன்றிய அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில் ஒன்றிய அமைச்சரவை மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 12 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
