×

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நீடிக்கும் சலசலப்பு; எடப்பாடியிடம் சரணடைய சி.வி.சண்முகம் திடீர் முடிவு: பதவியை தக்கவைக்க ஆதரவு திரட்டும் பசுபதி

 

திண்டிவனம்: அதிமுகவில் அதிருப்தியில் உள்ள சி.வி.சண்முகம் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்யாத நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் சரணடைய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் புதிய மாவட்ட செயலாளரான பசுபதி, தனது பதவியை தக்கவைக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவதால் விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் சலசலப்பு நீடிக்கிறது. அதிமுக சட்டமன்ற தேர்தலுக்குபின் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். இதற்கிடையே எஸ்பி வேலுமணி தரப்பினர், மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சமரசமாகினர்.

இதில் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை வைத்த சி.வி.சண்முகம் தனித்து விடப்பட்ட நிலையில், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இதற்கிடையை திண்டிவனத்தில் முகாமிட்டுள்ள சி.வி.சண்முகம், தான் வெற்றிபெற்ற மயிலம் தொகுதி வாக்காளர்களை நேற்று முதல் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். நாளை இதை நிறைவு செய்யும் சி.வி.சண்முகம் சென்னை சென்று தனது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. தொகுதி மக்களிடம் சி.வி.சண்முகம் பேசுகையில், என்னை நம்பி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த உங்களுக்கு, என்னுடைய கடமையை முழுமையாக செய்வேன். உங்களுக்காக என்றென்றும், நான் உழைப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.

சி.வி.சண்முகம் தனது பேச்சில், எம்எல்ஏவாக முழுமையாக எனது கடமையை தொடர்ந்து செய்வேன் என கூறியிருப்பதன்மூலம், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்பது தெளிவாகி உள்ளது. இதனால் வேலுமணியை போல, எடப்பாடி பழனிசாமியிடம் சரணடைந்து விடுவார் என அதிமுகவினர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக தனது ஆதரவாளரான ராமதாசை எடப்பாடிக்கு தூது அனுப்பி இருப்பதாக தகவல் பரவிவரும் நிலையில், தற்போது மாவட்ட செயலாளராக உள்ள பசுபதியை, நீக்கிவிட்டு மீண்டும் அப்பதவியை பிடிக்க காய்நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 22 அதிமுக ஒன்றிய செயலாளர்களில் பெரும்பாலானோர் சி.வி.சண்முகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள நிலையில், 6 பேர் மட்டுமே பசுபதியிடம் உள்ளனர்.

இதனால் தனது பதவியை தக்கவைக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புதிய மாவட்ட செயலாளரான பசுபதி வானூர், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர், கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது சி.வி.சண்முகம் மட்டுமல்ல அவரது குடும்பத்தின் ஆதிக்கமும் இனி அதிமுகவில் இல்லாமல் இருக்கவும், தங்களுக்கான உரிய மரியாதை கிடைக்கவும் தன்னை ஆதரிக்க வேண்டுமென கேட்டுள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் தொடர்ந்து சலசலப்பு நீடிக்கிறது.

சாவியை ஒப்படைத்த சி.வி.சண்முகம் தரப்பு
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தை தன்வசப்படுத்த எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் தரப்பு கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் அசம்பாவிதம் தடுக்கும் வகையில் போலீசார் அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். கோட்டாட்சியருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைக்குபின் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் கட்சி அலுவலகம் தங்களுக்குதான் சொந்தம் என்பதற்கான ஆவணங்களை கோட்டாட்சியர் முன்னிலையில் சமர்ப்பித்தனர். கடந்த 19ஆம்தேதி விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், சிவி சண்முகம் தரப்பினருடன், பின்னர் பசுபதி தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று அலுவலக சாவியை சிவி சண்முகம் தரப்பினரிடம் இருந்து பெற்ற கோட்டாட்சியர் முருகேசன், அதை அக்கட்சியின் புதிய விழுப்புரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 2 வாரமாக பூட்டப்பட்டு கிடந்த அதிமுக அலுவலகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

Tags : Viluppuram District Adamuga ,C. ,Shanmugham ,Greens ,Dindivanam ,Shanmugam ,Edappadi ,Palanisami ,Pasupathi ,
× RELATED ஜூன் 10ல் பாஜக கூட்டணி கூட்டம்: ஒன்றிய...