சென்னை: நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது தாயார் மோகினி (85) இவர் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. அஜித்தின் தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகர் அஜித்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது; அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
