×

வெற்றி வாய்ப்புள்ளவர்களை புறக்கணித்தனர் காங். வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய ஊழல்: ஜோதிமணி எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது காங்கிரசில் தொகுதி தேர்வு, வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. வெற்றிவாய்ப்பு உள்ளவர்களை புறக்கணித்துள்ளனர் என ஜோதிமணி எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது. அந்த கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தது.

அதே நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வின் போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. உண்மையாக காங்கிரசாருக்கு இடம் வழங்கவில்லை. கோடிக்கணக்கில் பணம் வழங்கியவர்களுக்கு மட்டுமே சீட் ஒதுக்கப்பட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், வேட்பாளர் தேர்வுக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தவறான வேட்பாளர் தேர்வே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்று தேர்தலுக்கு பிறகு தலைவர்கள் கூற தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் பெண் எம்பி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்த பிறகு அதற்கு தகுந்தது போல தொகுதிகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன.

சர்வே என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. கட்சிக்கு நீண்டகாலம் பணியாற்றியவர்களை, வெற்றிவாய்ப்பு உள்ளவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்கள், வெற்றி வாய்ப்பில்லாத பலருக்கு தொகுதிகள் கேட்டுப்பெறப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற சிலர் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள் கட்சியில் இருந்து விலகுகின்றனர் அல்லது ஒதுங்கி விட்டனர்.

இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கியது யார்? எதன் அடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தொகுதி தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விசாரணை நடத்தாமல், தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளை மட்டும் விசாரிக்க கமிட்டி அமைப்பது தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமே. தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டது தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கமிட்டி.

அந்தக் கமிட்டி மீதான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டுமே விசாரிக்க முடியும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொறுப்பாளர்கள் விசாரிக்க முடியாது.
காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே தன்னை சீரமைத்துக் கொள்ள விரும்பினால் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான விசாரணையை முறையாக நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

பல்வேறு மாநிலத் தேர்தல்களில் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. சில நேரங்களில் இதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைகிறது. ஆனால் விசாரணை செய்வதற்குப் பதிலாக தவறு செய்தவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். தமிழ்நாடு வேட்பாளர் தேர்வை மிக அருகில் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு வெளிப்படையாக தவறுகள் நடப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு மிகபெரிய பின்னடைவாக அமையும்.

இந்த நாட்டை பாஜவின் நரேந்திர மோடியிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ராகுல்காந்தி எவ்வித சமரசமும் இல்லாமல் போராடி வருகிறார். ஆனால் கட்சிக்குள் நடக்கும் இதுபோன்ற தவறுகள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை குலைத்து வருகிறது. நாம் ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக களத்தில் நின்று போராடி வெற்றிபெற வேண்டுமானால் கட்சிக்குள் தொண்டர்கள் மாவட்ட, வட்டார தலைவர்களின் குரலுக்கு மதிப்பு இருக்க வேண்டும்.

நேர்மையோடும், வெளிப்படைத் தனமையோடும் கட்சி செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தம் தமிழ்நாட்டில் இருந்து துவங்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. காங்கிரசில் தொகுதி தேர்வு, வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் எம்பியே குற்றம் சாட்டியிருப்பது கட்சிக்குள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொண்டர்களிடையே தற்போது பேசும் பொருளாகியுள்ளது.

* காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே தன்னை சீரமைத்துக் கொள்ள விரும்பினால் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான விசாரணையை முறையாக நடத்த வேண்டும்.

* தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

* தமிழ்நாடு வேட்பாளர் தேர்வை மிக அருகில் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

* இவ்வளவு வெளிப்படையாக தவறுகள் நடப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

Tags : Congress ,Jyothimani ,Chennai ,Tamil Nadu Assembly ,
× RELATED ஐபிஎல் குவாலிபயர் 2 போட்டி: ராஜஸ்தான்...