மதுரை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளனர். இதனால், தினசரி பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. முதுநிலை மற்றும் சிறு, குறு கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் முருகன் கோயில்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் கும்பாபிஷேகம் கடந்த வருடங்களில் நடத்தப்பட்டன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் செப்.17ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இதற்கிடையே மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதால் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இருக்கும் பணியாளர்களை வைத்து கூடுதலாக பணிகள் செய்வதால் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பு உள்ளிட்ட விடுப்புகளில் சென்று விடுகின்றனர். இதனால், கோயில்களில் ஏற்படும் கூட்ட நெரிச்சலை கூட கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.
மேலும், கடைசியாக கடந்த ஆட்சி காலத்தில் 2021ம் ஆண்டு திருச்செந்தூர் உள்ளிட்ட முதுநிலை கோயில்களில் 1000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் 2008ம் ஆண்டு முதல் அடிப்படை பணியாளர்கள் கூட நியமிக்கவில்லை. இதேபோல் 2021 முதல் மாநிலத்தில் 8க்கும் மேற்பட்ட கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம், முதலுதவி மையம் என பல இடங்களில் 3 வருடத்திற்கு மேலாக தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் அனைத்து முக்கிய கோயில்களில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முன்பதிவு தரிசன முறையை கொண்டு வரவேண்டும். பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் என பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனை புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள அமைச்சர் கவனத்தில் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
