×

மாத்திரை சாப்பிடப் போறீங்களா? இதை கவனிங்க

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய தேதியில் மாத்திரை என்பது கிட்டதட்ட ஒவ்வொருவரின் வாழ்விலுமே தினசரி தவிர்க்கவியலாத ஒரு விஷயமாகிவிட்டது. வாழ்க்கை எனும் வண்டியை இழுத்துக்கொண்டு ஓடும் சக்கரமாகவே இம்மாத்திரைகள் மாறிவிட்டன. நீண்ட கால நோய்களில் தொடங்கி சாதாரண தலைவலி, உடல்வலி வரை அனைத்துக்கும் ஒரு மாத்திரையை விழுங்கிவிட்டு ஓடிக்கொண்டிருப்பது என்பது பெரும்பாலானவர்களின் சராசரி அன்றாடம் என்றாகிவிட்டது. ஆனால் இன்னமும் மாத்திரைகளை எப்படிச் சாப்பிட வேண்டும் என்கிற குழப்பம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. மருத்துவர்களுமேகூட இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகளைச் செய்கிறார்கள். இதில் உருவாகும் குழப்பம் எல்லோரையும் உறுத்துகிறது. சரி மாத்திரையை எப்படிச் சாப்பிட வேண்டும் வாங்க பார்க்கலாம்.

மாத்திரை சாப்பிடுவதென்பது மிகவும் எளிதான செயலாகத் தோன்றலாம். நாம் மாத்திரையை வாயில் போட்டு, சிறிது தண்ணீர் குடித்து, அதனுடன் வேலை முடிந்துவிட்டதாக உணர்கிறோம்.ஆனால், மருந்துகளைச் சரியான முறையில் உட்கொள்வதென்பது, பலரும் நினைப்பதைவிட மிக முக்கியமான செயலாகும். சிலர் மாத்திரைகளைக் குளிர்ந்த நீருடன் விழுங்குகிறார்கள், சிலர் வெந்நீரை பயன்படுத்துகிறார்கள்.

மாத்திரையை விழுங்க பிடிக்காதவர்கள், தேநீர், காபி, பால் அல்லது மென்பானங்களுடன் அதை உட்கொள்கிறார்கள். ஆனால், இவ்வாறு செய்வது சில நேரங்களில் மருந்து செயல்படக்கூடிய விதத்தை பாதிக்கக்கூடும் என்பதை அவர்கள் அறிவதில்லை. சிலர் தங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி மாத்திரைகளைத் துல்லியமாக உட்கொள்கிறார்கள். வேறு சிலரோ எப்போதெல்லாம் ஞாபகத்துக்கு வருகிறோ அப்போதெல்லாம் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்.

ஆனால், நமக்குத் தோன்றியபடியெல்லாம் மாத்திரைகளை உட்கொள்வது சரியான செயலா? அதற்கான பதில்: இல்லை, அது எப்போதுமே சரியான அணுகுமுறையல்ல. நீங்கள் எந்த வகையான தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள், மாத்திரையுடன் எந்தப் பானத்தைப் பருகுகிறீர்கள், எந்த நேரத்தில் உட்கொள்கிறீர்கள் என்பன போன்ற மிகச் சிறிய விஷயங்கள்கூட, மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

இத்தகைய காரணிகள், மருந்து உடலால் எவ்வாறு உறிஞ்சப்படுகிறது என்பதையும், அது எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதையும் பாதிக்க வல்லவை. எளிதாகக் கூறுவதெனில், நீங்கள் ஒரு மாத்திரையை உட்கொள்ளும் விதமே அந்த மருந்து முறையாகச் செயல்படுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. எனவே, மாத்திரைகளைச் சரியான முறையில் உட்கொள்வது குறித்த சில சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள தகவல்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

மருந்துகளில் பல வகைகள்

சிரப்கள் (திரவ மருந்துகள்), சஸ்பென்ஷன்கள், மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், பொடிகள், ஊசிகள் எனப் பல்வேறு வடிவங்களில் மருந்துகள் வருகின்றன.சிரப்களை போன்ற திரவ மருந்துகள் உடலால் பெரும்பாலும் எளிதாக உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன. இருப்பினும், அவை கெட்டுப் போகக்கூடும் என்பதால், அவற்றை நீண்ட காலத்துக்குப் பாதுகாத்து வைப்பது சற்று கடினமாக இருக்கலாம். பல மருந்துகள் மாத்திரைகள் அல்லது காப்ஸ்யூல்களாக தயாரிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மேலும், ஒவ்வொரு மருந்தையும் திரவ வடிவில் தயாரிக்கவோ அல்லது உட்கொள்ளவோ இயலாது. சில மருந்துகள், ‘மெதுவாக வெளிப்படும் மருந்துகள்’ (slow-release medicines) என்ற வகையில் சிறப்பாகத் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, இந்த மருந்துகள் வயிற்றைச் சென்றடைந்த பிறகு, ஒரே நேரத்தில் முற்றிலுமாக வெளிப்படுவதில்லை. அவை பல மணிநேரம் மெல்ல மெல்ல வெளிப்பட்டு, நீண்ட நேரத்துக்கு உடலில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

இதன் காரணமாக, இந்த வகையான ‘மெதுவாக வெளிப்படும் மாத்திரைகளை’ நசுக்கவோ அல்லது மென்று சாப்பிடவோ கூடாது. அவ்வாறு நீங்கள் அவற்றை நசுக்கினாலோ அல்லது மென்று சாப்பிட்டாலோ, மருந்து மெதுவாக வெளிப்படுவதற்குப் பதிலாக ஒரே நேரத்தில் முழுவதுமாக உடலில் வெளியாகிவிடக்கூடும். இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

குளிர்ந்த நீரா? வெந்நீரா?

இப்போதுள்ள அடுத்த கேள்வி: மாத்திரைகளைச் சாப்பிட எத்தகைய நீரைப் பயன்படுத்துவது சிறந்தது? எதைத் தவிர்க்க வேண்டும்?

எந்தவொரு மாத்திரை அல்லது காப்ஸ்யூலாக இருந்தாலும் அதை வெதுவெதுப்பான நீருடன் சாப்பிடுவதே சிறந்தது. அதுவொரு திட வடிவ மாத்திரையாக இருந்தாலும் சரி, மருந்துத் துகள்களால் நிரப்பப்பட்ட காப்ஸ்யூலாக இருந்தாலும் சரி வெதுவெதுப்பான நீருடன் உட்கொள்ளும்போது மட்டுமே அந்த மாத்திரை முறையாகச் செயல்படுகிறது.

குளிர்ந்த நீர், மாத்திரை அல்லது காப்ஸ்யூல் கரையும் செயல்முறையை மெதுவாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது, மருந்து உடலில் சிதைந்து கரைவதற்கு அதிக நேரம் எடுக்கலாம். அதேவேளையில், மிக அதிகமாகச் சூடான நீர் மருந்தின் செயல்திறனைக் குறைக்கக்கூடும். அதாவது, மருந்து செயல்பட வேண்டிய அளவுக்குச் சிறப்பாகச் செயல்படாமல் போகலாம்.

நாம் உட்கொள்ளும் மருந்துகள், வயிறு மற்றும் குடல்களில் உள்ள செல்களின் வாயிலாக உடலால் உறிஞ்சப்படுகின்றன. ஆனால், இந்த உறிஞ்சுதல் செயல்முறை சரியாக நடைபெற வேண்டுமானால், செரிமான மண்டலத்தின் உட்புறச் சூழல் அதற்கு ஏற்றவாறு அமைந்திருக்க வேண்டும்.மருந்துகள் முறையாகக் கரைந்து உறிஞ்சப்படுவதற்கு, வயிறு மற்றும் குடல்களின் ‘லூமென்’ என்ற உட்புறப் பகுதியின் வெப்பநிலை பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

குளிர்ந்த நீருடன் உட்கொள்ளும்போது மருந்துகள் கரைவடைய அதிக நேரம் எடுக்கும். இது வயிற்றின் உட்புற வெப்பநிலையைக் குறைக்கவும் கூடும்; இது மருந்து உடலால் முறையாக உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தலாம்.நாம் மாத்திரைகளைக் குளிர்ந்த நீருடன் எடுத்துக் கொள்ளும்போது, விழுங்கிய மருந்தைச் செயலாக்குவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உடல் தனது கூடுதல் ஆற்றலை முதலில் அந்தக் குளிர்ந்த நீரை உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு சூடுபடுத்துவதிலேயே செலவிடுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

எனவே, மாத்திரைகள் முறையாகக் கரையவும், உடல் மருந்தை இன்னும் திறம்பட உறிஞ்சிக்கொள்ளவும் உதவக்கூடும் என்பதால், மருந்துகளை உட்கொள்ளும்போது பொதுவாக வெந்நீரைப் பயன்படுத்துவதே சிறந்தது. மேலும், மருந்து உட்கொள்வதன் நோக்கமே, அது உடலுக்குள் விரைவாகச் சென்று தனது வேலையைத் தொடங்க வேண்டும் என்பதுதான். ஆனால், நீங்கள் மாத்திரைகளைக் குளிர்ந்த நீரில் எடுத்துக்கொண்டால், இந்தச் செயல்முறை மெதுவாகலாம், அதாவது மருந்து வேலை செய்ய அதிக நேரம் எடுக்கலாம்.

அதேவேளையில், மிகவும் சூடான நீரைப் பயன்படுத்துவதும் தவறு. மிகவும் சூடான நீர் மருந்தின் செயல்திறனைச் சேதப்படுத்தலாம் அல்லது குறைக்கலாம். இதன் காரணமாக, மருந்துகளை உட்கொள்ளும்போது அறை வெப்பநிலையில் உள்ள நீரைப் பயன்படுத்துவதே நல்லது.

பால், பழச்சாறுடன் மாத்திரை சாப்பிடலாமா?

இதுபோக, மருந்துகளை பால், மினரல் வாட்டர், பழச்சாறு ஆகியவற்றுடன் எடுத்துக்கொள்ளலாமா என்ற மற்றுமொரு பொதுவான கேள்வி மக்களிடையே உள்ளது.மருந்துகளைச் சாதாரண தண்ணீருடன் எடுத்துக்கொள்வதே சிறந்தது. ஏனெனில், பால், மினரல் வாட்டர், பழச்சாறு, பீர், ஒயின் ஆகியவை சில நேரங்களில் மருந்தின் விளைவுகளை மாற்றக்கூடும்.குறிப்பாக பால் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுக்கிறார்கள். அவர்கள், ‘‘பாலில் கால்சியம் உள்ளது. அது மருந்துடன் பிணைந்து, ரத்த ஓட்டத்தில் நுழைவதைத் தடுக்கிறது” என்கின்றனர்.

ஒரு கோப்பை காபியில் சிறிதளவு பால் கலந்தால்கூட, அது மருந்தின் செயல்திறனை பாதிக்கக்கூடும் என்கிறார்கள்.அதிக அளவு கால்சியம் கொண்ட, கால்சியம் செறிவூட்டப்பட்ட பழச்சாறுகள், மினரல் வாட்டர் ஆகியவற்றிலும் இதே பிரச்னை ஏற்படலாம். ஏனெனில், அவையும் சில மருந்துகளுடன் குறுக்கிடக்கூடும்.பால் மற்றும் பால் பொருட்கள் சில மருந்துகளின், குறிப்பாக தைராய்டு ஹார்மோன் மருந்துகள், ஆஸ்டியோபோரோசிஸ் மருந்துகள் மற்றும் பல வகையான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்திறனைக் குறைக்கக்கூடும்.

மதுவுடன் மருந்துகளைச் சாப்பிடலாமா?

மற்ற பழச்சாறுகளைவிட, திராட்சை சாறு பல மருந்துகளின் செயல்திறன் மற்றும் அவற்றின் பக்க விளைவுகளில் தாக்கம் செலுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக மருந்துப் பொருட்களைச் சிதைக்கும் நொதிகளை நம் உடலில் திராட்சை சாறு தடுக்கக்கூடும். இதனால், மருந்து உடலில் நீண்ட நேரம் தங்கியிருக்கலாம் அல்லது எதிர்பார்த்ததைவிட அதிக வீரியத்துடன் செயல்படலாம். உயர் ரத்த அழுத்தம், இதய நோய், கொழுப்பு வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் பிற நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளை திராட்சை சாறு பாதிக்கக்கூடும்.

இதுவரை, ஆரஞ்சு சாறு, ஆப்பிள் சாறு ஆகியவற்றில் இத்தகைய தீங்கு விளைவிக்கும் தன்மைகள் கண்டறியப்படவில்லை.எனவே, எந்தச் சூழ்நிலையிலும் மருந்துப் பொருட்களை மதுவுடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது. சிலர் மது அருந்திய பிறகு பி.பி மாத்திரைகளை, சர்க்கரை மாத்திரைகளை உண்பார்கள். இதுவும் தவறுதான்.ஏனெனில், மருந்துகளின் செயல்பாட்டுக் கூறுகளுடன் வினைபுரிந்து, ஆபத்தான பக்க விளைவுகளை மது ஏற்படுத்தக்கூடும்.

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

மருந்து உட்கொள்ளும்போது எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் என்பது மற்றொரு முக்கியமான கேள்வி. சிலர் மாத்திரைகளை தண்ணீர் ஏதுமின்றி அப்படியே விழுங்கிவிடுகின்றனர். ஆனால் இது பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். மேல் பூச்சு (coating) இல்லாத மாத்திரைகள் நாக்கில் ஒட்டிக்கொண்டு, கசப்பான சுவையை ஏற்படுத்தலாம்.தண்ணீரின்றி மாத்திரையை உட்கொள்வது ஆபத்தானது.

ஏனெனில், அது தொண்டையில் சிக்கிக்கொண்டு, மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும்.தண்ணீரின்றி மாத்திரையை உட்கொண்டால், அது முறையாக செரிமானம் ஆகாது. அந்த மாத்திரை செரிமான மண்டலத்தின் வழியாகப் பயணித்து, மலத்தின் வழியாக அப்படியே வெளியேறிவிடக்கூடும். மாத்திரை செரிமானம் ஆகாமல் வெளியேறினால், அதன் மூலம் உடலுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவப் பயன்களும் கிடைக்காமலே போய்விடும்.

இபுப்ரோஃபென்’ போன்ற ஸ்டிராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ளும்போது போதுமான அளவு தண்ணீர் அருந்தாவிட்டால், அவை வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் கலந்து, வயிற்றுப் புண்கள் மற்றும் காயங்களை ஏற்படுத்தக்கூடும்.பொதுவாக, மருந்து சாப்பிடும்போது அறை வெப்பநிலையில் உள்ள ஒரு முழு குவளைத் தண்ணீரை அருந்தலாம். எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அதன்படி பின்பற்றுங்கள்.

குறிப்பு: இந்தத் தகவல் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்னைகள், சிகிச்சைகள் அல்லது மருந்துகள் தொடர்பான விஷயங்களுக்கு, எப்போதும் ஒரு மருத்துவரிடம் நேரடியாக ஆலோசனை பெற்று அதைப் பின்பற்ற வேண்டும்.

Tags :
× RELATED ஆஸ்டியோபோரோசிஸ் காரணமும் – தீர்வும்